வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதனை நிராகரித்தார் – கர்தினால் –

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதனை நிராகரிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தமது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரையில் வெளிவிவகார அமைச்சரை சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடிதம் ஊடாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்காக கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தின் அருட் தந்தை காமினி பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரையில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸை சந்திக்க தாம் தயாரில்லை என கர்தினால் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க கூடிய வகையில் சரியான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென கர்தினால் கடிதம் மூலம் அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தினாலேயே கத்தோலிக்க சமூகமும் பொதுமக்களும் அரசாங்கத்தை நம்புவார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் நம்பிக்கைக்குரியவை அல்ல என அருட்தந்தை பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews