தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கக்கூடாது – உதய கம்மன்பில எம்.பி

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் இடமளிக்கக்கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொள்வதற்காக சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று சென்றனர்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளான ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும, உதய கம்மன்பில உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 33ஏ பிரிவுக்கு அமைவாக தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக சுதந்திரமான சாதாரணமான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியது.

சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதியிடம் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்பை மீறியுள்ளார். இது பாரிய குற்றமாகும்.

தற்போதைய நிலையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் வாழ்வாதாரச் சுமை தாங்க முடியாது அரசாங்கத்தின் மீது பாரிய அதிருப்தியில் உள்ளனர்.

அதேபோன்று வரி அதிகரிப்பு காரணமாக மத்தியத்தர வர்க்கத்தினரும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியிலேயே உள்ளனர்.

அந்த அதிருப்தியை தெரியப்படுத்தி தங்களது விருப்பத்தை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பமாகவே தேர்தல் காணப்படுகின்றது.

தேர்தலின்போது தங்களது அதிருப்தியை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லையாயின் மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி, ஆயுதங்களை ஏந்தி தங்களது வெறுப்பை காண்பிப்பதற்கான சூழல் காணப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

நிதி இல்லை என்பதை அடிப்படையாக வைத்து தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு இடமளித்தால் இலங்கையின் இனி எப்போதும் தேர்தலொன்று இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.

இதன்போது கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும,

சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது முன்கூட்டியே நாம் தோல்வியை அறிந்துகொண்டால் பந்தை ஒளிப்போம். நாட்டின் ஜனாதிபதி தற்போது அவ்வாறான செயற்பாட்டிலேயே ஈடுபட்டு வருகின்றார்.

நாட்டின் பிரஜைள் என்ற முறையில் வரலாற்றில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்துக்கும் நினைவூட்ட வேண்டும்.

வரலாற்றில் தேர்தல் தொடர்பில் சுயநலபோக்குடன் செயற்பட்ட ஐந்து சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அந்த ஐந்து சந்தர்ப்பங்களில் மூன்று சந்தர்ப்பங்களில் பிரதான பொறுப்பாளியாக ஐக்கிய தேசிய கட்சியே இருந்தது.

தற்போதைய ஜனாதிபதி அமைச்சர் என்ற முறையில் அந்த சந்தர்ப்பங்களிலும் பொறுப்பாளியாகக் காணப்பட்டார்.

எனவே தேர்தலை ஒத்திவைப்பது என்பது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நன்கு பழகிபோன ஒரு விடயமாகும்.

எனவே தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கையை கலைப்பதற்கு ஊடகங்கள் இடமளிக்கக்கூடாது.

Recommended For You

About the Author: Editor Elukainews