நேர மாற்றத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஒகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார். மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து இன்று இரவு இலங்கை திரும்பவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

மிரிஹான வீட்டிற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல தடவைகள் கோட்டாபய இலங்கைக்கு வருவதற்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டன.

நாளைய தினம் வருவார் என கூறப்பட்ட நிலையில் இன்று இரவே அவர் நாடு திரும்புகின்றார் என தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin