கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி இன்றைய தினம் விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. 2010ம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த குறித்த காணியே இன்று விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் காணி உரிமையாள் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்சவின் பணிப்பின் பெயரில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டது.
57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் உள்ள காணிகளை படையினர் படிப்படியாக கையளிப்பது வரவேற்கத்தக்கது எனவும், படையினர் வசம் உள்ள மேலும் சில காணிகளையும் விடுவிக்க படையினர் முன்வர வேண்டும் எனவும் அவர் நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தன, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், காணி உரிமையாளர் என பலரும் கலந்துகொண்டனர்.
காணி கிடைத்தமை தொடர்பில் படையினருக்கு காணி உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.