தென் இலங்கையின் இரு அணிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர்…..! சி.அ.யோதிலிங்கம்.

தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் பரவலாக இடம் பெற்று வருகின்ற அதே வேளை மகிந்த ராஜபக்ச தன்னுடைய இருப்பையும் தமது குடும்ப ஆட்சியின் இருப்பையும் தக்க வைக்கும் வகையில் கடுமையாக காய்களை நகர்த்தி வருகின்றார். அதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளையும் கண்டு வருகின்றார்.
அவரது காய் நகர்த்தல் மூன்று வழிகளில் இடம் பெறுகின்றன அதில் முதலாவது மொட்டுக்கட்சியை கூடிய வரை சிதைய விடாமல் தடுத்து வைத்திருப்பதாகும். தற்போது மொட்டுக்கட்சியிலிருந்து விலகுவதற்கு எவரும் தயாராக இல்லை ஏற்கனவே கட்சியிலிருந்து விலகிய விஐயதாசராஜபக்ச போன்றவர்கள்  சோபிக்காததும் எதிரணி பலமில்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இரண்டாவது மொட்டு அணியை மீளவும் ஒழுங்கமைப்பதாகும். சுயாதீன அணி எனக் கூறி வெளியேறியவர்களுக்கு வெளியில் பெரிய களம் கிடைக்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கத் திட்டமிட்ட போதும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் மகிந்தர் அழைத்த போது ஓடிச் சென்று காலில் விழுந்துள்ளனர். உப சபாநாயகர் தெரிவில் மகிந்தர் தனது பலத்தைக் காட்டியிருக்கின்றார். 148 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 65 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளனர்.  சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் விருப்பத்திற்கு மொட்டுக்கட்சி விட்டுக் கொடுத்து ரஞ்சித்சியம்பலாப்பிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மகிந்தரின் மூன்றாவது காய்நகர்த்தல் இந்தியாஇ சீனாஇ ரஸ்யா என்பவற்றுடன் நல்லுறவுகளைப் பேணி பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயற்சிப்பதாகும். இதில் இந்தியாவிற்கே முதன்மை இடம் கொடுத்துள்ளார். இந்தியா தன் பக்கம் நின்றால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் அழுத்தங்களை பலவீனமாக்கலாம் என்பதில் அதீத நம்பிக்கை அவருக்கு உண்டு.
மேற்குலகம் போராட்டக்காரர்களோடு நின்றாலும் இந்தியா ஆட்சியாளர்களுடனேயே நிற்கின்றது. இந்தியாவிற்கு இரண்டு விடயங்கள் முக்கியம். ஒன்று அண்மையில் கோத்தா அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களைப் பாதுகாப்பது. இரண்டாவது தனது வாசல் படியில் உள்ள இலங்கையில் அதிகம் குழப்பங்களை வராமல் தடுப்பது. இரண்டும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம். இதற்குள் போராட்டக்காரர்களை மேற்குலகம் பார்க்கட்டும்இ ஆட்சியாளர்களை நான் பார்க்கின்றேன். என்ற உடன்பாடும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் சம்மதத்துடன் தான் இந்தியா உதவியையும் அளிக்கின்றது.
மறுபக்கத்தில் சீனாவுடனும் இ ரஸ்யாவுடனும் உறவு கட்டியெழுப்பப்படுகின்றது. சீனா மீண்டும் சீன நாணயத்தில் கடன் வழங்க முன் வந்துள்ளது. ரஸ்யா குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முன் வந்துள்ளது.
போராட்டக்காரர்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் போராட்டம் நாடு தழுவிய பேரெழுச்சி என்றளவிற்கு இன்னமும் வளரவில்லை. சிங்கள மக்களிலும் நடுத்தரவர்க்கமும்இ நகர்ப்புற வர்க்கமும்  முன்னிலையில் நிற்கின்றது கிராமப்புற மக்கள் இன்னமும் முழுமையாக இணையவில்லை. மலையக மக்களும் முஸ்லீம் மக்களும் கணிசமானளவுக்கு பங்குபற்றினாலும் அங்கும் பேரெழுச்சிகள் நிகழவில்லை. மலையகஇ முஸ்லீம் அரசியல் கட்சிகள் இன்னமும் முழுமையான ஈடுபாட்டைக் காட்டவில்லை. வடக்கு   கிழக்கு தமிழ் மக்கள் அமைதியாகவே இருக்கின்றனர். அடையாள ஆதரவு மட்டும் இருக்கின்றது. பேரெழுச்சிகள் இருக்கவில்லை. சுமந்திரன்இ சாணக்கியன் போன்றோர் போராட்டங்களை நடாத்த விரும்பியிருந்தாலும் களச்சூழல் சாதகமாக இல்லாததினால் பின்வாங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நோண்டியான தமிழ்க்கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவசரப்பட்டு கையொப்பமிட்டுவிட்டு தற்போது விழி பிதுங்கி நிற்கின்றது. கூட்டமைப்பின் தலைமைக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் சிங்கள எதிர்க்கட்சிகளின் ஐக்கியமின்மையாலும்இ தமிழ் மக்களிடமிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களினாலும் “வாக்கெடுப்புக்கு வரட்டும் அந்தநேரம் பார்த்துக்கொள்வோம்” என விவகாரத்தை பிற்போட்டுள்ளது.
எனினும் தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை கவலையான விடயம் தூரநோக்குடன் திட்டமிட்டு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமைதான். கோட்பாட்டு அடிப்படையிலும்இ இராஜதந்திர அடிப்படையிலும் இந்த விவகாரத்தை எவ்வாறு அணுகுவது என்பதில் தமிழ்க் கட்சிகள் போதிய முதிர்ச்சிகளைப் பெறவில்லை. பொதுப்போக்குகளுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வது நல்லதலைமையின் இலட்சணமல்ல. பொதுப்போக்கினை  தமிழ் மக்களின் நலன்களிலிருந்து கையாள்வது தான் நல்ல இலட்சணமாக இருக்கும்.
தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரை தமிழ்த்தரப்பின் மரபு ரீதியான பார்வை மிகவும் பலவீனமானது. நீல அணி மட்டுமே இனவாத அணி என்ற பார்வை தமிழ்த்தரப்பிடம்; உள்ளது. இது மிகவும் தவறானது. தென்னிலங்கையிலுள்ள இரண்டு அணிகளுமே பேரினவாத அணிகள் தான.; மூன்றாவது அணியாக உள்ள ஜே.வி.பி யும் பேரினவாத அணி தான். சிங்கள சமூக உருவாக்கமும்இ அதன் வழி அரசுரவாக்கமும் பேரினவாத மயப்பட்டிருப்பதால் பேரினவாதத்திற்கு வெளியேயுள்ள கட்சிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருப்பு இல்லை. முற்போக்கு பேசிய இடது சாரிகளான N.ஆ.பெரேரா இ கொல்வின் ஆர்.டி.சில்வா உட்பட வாசுதேவ நாணயக்கார வரை எவரும் இதற்கு விதிவிலக்காகவில்லை. அரசியல்வாதிகளை விட்டு விடுவோம்இ தயான் ஜயதிலக இ குமார் ரூபசிங்கா போன்ற கல்வியாளர்களும் விதிவிலக்காக இருக்கவில்லை. இந்த நிலைமைகளை மாற்ற வேண்டுமாயின் சிங்கள மக்கள் மத்தியில் பன்மைத்தன்மையை அதன் அடையாளங்களுடன் அங்கீகரிக்கின்ற கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும். சிங்கள அரசியல் கட்சிகள் அதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை.
எனவே நீல அணிஇ பச்சை அணி தொடர்பாக மயக்கங்கள் எதுவும் தமிழ் மக்களிடம் இருக்கக்கூடாது. கிழக்கின் நண்பர் ஒருவர் “ஒரு தரப்பை கொத்திக் கொல்லும் பாம்புஇ மற்றையதை நக்கிக் கொல்லும் பாம்பு” என வர்ணித்தார் அதுவே உண்மையாகும். இதன்படி பார்த்தால் சிங்கள தரப்பின் இரண்டு பிரதான அணிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்ல. இரண்டு அணிகளுமே கையாளப்படவேண்டியவை. ஒரே நேரத்தில் இரண்டு தரப்பையும் கையாளவேண்டியிருப்பதால் இரு அணிகளிலிருந்தும் தமிழ்த் தரப்பு சம தூரத்தில் இருப்பதே தமிழ் அரசி;யலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். கூட்டமைப்பின் தலைமை இருப்பதற்குள் பச்சை அணி நல்லது என சொல்லப்பார்க்கின்றது. நக்கிக் கொல்லும் பச்சை அணி எவ்வாறு நல்ல அணியாக இருக்கும் என்பது கூட்டமைப்பின் தலைமைக்குத்தான் வெளிச்சம்.
கையாளுதல் என வருகின்றபோது உணர்வு அரசியலுக்கு அப்பால் இரண்டு அணிகளிலும் தமிழ்த்தரப்பிற்கு சாதகமாக உள்ள புள்ளிகளை முதலில் அடையாளம் காணவேண்டும். இந்த இரண்டு அணிகளிலும் கோத்தா சார்ந்த நீல அணி இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஆட்சியிலிருக்கும் அணிஇ புவிசார் அரசியலுக்குள்ளும் மாட்டுப்பட்டிருக்கின்ற அணிஇ பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற அணிஇ எனவே இந்த அணி ஆட்சியிலிருக்கும்போதே  தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முயலவேண்டும். மற்றய அணியைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது நல்லாட்சிக்கால அனுபவம்.
தமிழ்த் தலைமைகள் நிறைவேற்று ஜனாதிபதி முறை மாற்றத்திற்காகவும் முனைப்புடன் செயற்பட முனைகின்றன. நிறைவேற்று ஜனாதிபதிமுறை இல்லாமல் போனால் பாராளுமன்ற முறைவரும். தமிழ் மக்கள் அதிக ஒடுக்குமுறைக்குள்ளானது பாராளுமன்ற முறையினால் தான். இந்த பாராளுமன்ற முறையே ஆட்சி அதிகார கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை அரசியல் யாப்பு ரீதியாக தூக்கி வீசியது. நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒரு சர்வதிகார முறை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதை விட சர்வதிகார முறையாக பாராளுமன்ற முறை தமிழ் மக்களுக்கு இருந்தது.
தவிர ஜனாதிபதி முறையில் தமிழ் மக்களுக்கு சில பிடிகள் உள்ளன. ஜனாதிபதி முழு மக்களினாலும் தெரிவு செய்யப்படுகிள்ற ஒருவர். இதனால் தென்னிலங்கையின் இரு அணிகளுக்கிடையே போட்டி நிலவுகின்ற போது தமிழ் மக்களே தீர்மானிக்கின்ற சக்திகளாக இருப்பர். 2005 இலும் 2015 இலும் தமிழ் மக்களே தீர்மானிக்கின்ற சக்திளாக இருந்தனர். அங்கு பேரம் பேசல் பெரிதாக இருக்கவில்லை என்பது வேறு கதை. இதை விட தனி ஒரு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பது போல ஒரு குழுவாக இருக்கின்ற பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது.
எனவே தமிழ் மக்கள் தென்னிலங்கை தொடர்பான தனது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவது அவசியமானது. ஆயுதப் போராட்ட காலத்தில் விடுதலை இயக்கங்கள் இந்த கலாச்சார மாற்றத்தில் அக்கறையாக இருந்தாலும் போதிய விழிப்புணர்வை மக்களுக்கு கொடுக்கவில்லை
இங்கு தென்னிலங்கையின் இந்தப் போராட்டங்களிலிருந்து  முழுமையாக தமிழ்த்தரப்பு விலகியிருக்க வேண்டும் எனக் கூற வரவில்லை. இதனை கெட்டித்தனமாக கையாள வேண்டும.; நண்பர் நிலாந்தன் கூறியது போல தென்னிலங்கை போராட்டக்காரர்களுடன் மனம் திறந்த உரையாடல் ஒன்றை மேற் கொள்ள வேண்டும். தற்போதைய விவகாரம் “அரசாங்கம் பற்றிய விவகாரம் அல்ல அரசு பற்றிய விவகாரம்” என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தேசிய இனங்களை அவர்களின் அடையாளங்களுடன் இணைத்த அரசை உருவாக்காமல் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த நெருக்கடிகளுக்கு மிக முக்கியமான காரணம் நீண்ட காலப் போர் தான். போருக்காகத்தான் கடன் பெறப்பட்டது. கொள்ளளவுக்கு மீறிய இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்பட்டன. ஊழலுக்கான சூழல் திறந்து விடப்பட்டது. இந்த முக்கிய காரணம் போராட்ட களத்தில் விரிவாகப் பேசப்படாமல் நில விரிப்புக்குள் தள்ளப்படுகின்றது.
போர் அரசியலின் விளைவு. அந்த அரசியல் பிரச்சினையைத் தீர்;க்காமல் நெருக்கடி நிலையை ஒரு போதும் தீர்க்க முடியாது
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டிருக்கலாம் ஆனாலும் போர் இன்னமும் முடிவிற்கு வரவில்i. அது வேறு வகையில் தொடர்கின்றது. தற்போதைய நெருக்கடியின் உண்மை நிலை இது தான்.

Recommended For You

About the Author: Editor Elukainews