மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து பறந்த முக்கிய கடிதம்….!

மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து மகா சங்கத்தினருக்கு  முக்கிய கடிதம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு.

இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அறியாதவனாக நான் இல்லை. எனவே தான் நிபுணர்கள் குழுவூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.

இந்த நிலையில் குறித்த முன்னெடுப்புக்களில் வெற்றி இலக்கை அடைவதற்கு சிறு காலம் செல்லும் என்பதோடு , இதற்கு தங்களின் மேலதிக ஆலோசனைகளை பாதங்களை வணங்கி கேட்டு நிற்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நான்கு மகா சங்கத்தினரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

தம்மால் கடந்த 4 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்கு எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மகா சங்கத்தினரால் கடந்த 20 ஆம் திகதி மகா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரிதொரு கடிதம் அனுப்பப்பட்டது.

குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த 4 ஆம் திகதி உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள காரணிகளை நாம் ஒருபோதும் உதாசீனப்படுத்தவில்லை. உங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை நான் அறியாமல் இல்லை. நாளாந்த தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.

அதற்கமைய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான முன்னெடுக்கப்பட்டுள்ள தயார்ப்படுத்தல்கள் தற்போதும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர், திறைசேரி செயலாளர் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன் ஊடாக நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு எதிர்வரும் சில வாரங்களுக்குள் தற்காலிக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேரடங்கிய குழுவை நியமித்தேன்.

இந்த குழு கடந்த இரண்டு காலமாக வெ வ்வேறு அரசியல் கட்சிகள், விசேட நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த குழுவின் வரைபு கிடைக்கப் பெற்றவுடனேயே அதனை அமைச்சரவையிலும் பின்னர் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.

அதே போன்று அதன் பிரதியொன்றும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போன்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தினால் ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எனது ஒத்துழைப்புக்களை வழங்குவேன் என்பதோடு, அவ்வாறான திருத்தத்தினை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் இணைந்து கொண்டு வர வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கும் , அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கும் இதுவரையிலும் சாதகமான பதில் கிடைக்கப் பெறாமை கவலையளிக்கிறது.

எவ்வாறிருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமான எனது அழைப்பினை தொடர்ந்தும் விடுக்கின்றேன். நாம் எதனை செய்தாலும் அது அரசியலமைப்பிற்கமைய இடம்பெற வேண்டும் என்பதோடு, மக்களின் அபிலாஷைகளும் தற்போதைய அரசியலமைப்பின் ஊடாகவே நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே நானோ அல்லது எமது அரசாங்கமோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உதாசீனப்படுத்தவில்லை. அமைச்சரவை இன்றி நாட்டை நிர்வகிக்க முடியாது.

அதே போன்று அமைச்சரவை என்ற ஒன்று இல்லாமலிருப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதற்கமையவே சிரேஷ்ட அமைச்சர்களின் ஒத்துழைப்புடன், இளம் உறுப்பினர்கள் பெருமளவானோரை உள்ளடக்கிய அமைச்சரவையை நியமிப்பதற்கு என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வினைக் காண்பதற்காக குறுகிய காலத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது இரண்டரை வருட ஆட்சி காலத்தில் எந்தவொரு சிவில் ஆர்ப்பாட்டங்களிலும் கண்ணீர் புகை பிரயோகமோ அல்லது நீர்தாரை பிரயோகமோ மேற்கொண்டு அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதே போன்று எனது செயலக வளாகத்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த 19 ஆம் திகதி மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவத்திற்கு எனது கவலையை தெரிவித்துக் கொள்வதோடு , அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த விசாரணைகள் நிறைவடைந்த

பின்னர் அது தொடர்பான அறிக்கையையும் உங்களிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களால் குறிப்பிடப்பட்டதைப் போன்று நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் என்ற போதிலும், அவற்றுக்கு தற்காலிக மற்றும் நிரந்த தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அவற்றின் மூலம் சிறந்த பிரதிபலனைப் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, நெருக்கடியான அரசியல் சூழலை சுமூகமாக்குவதற்கும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உங்களது ஆலோசனைகளையும் தலையீட்டையும் வழங்க வேண்டும் என்று பாதங்களை வணங்கி கோருகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews