முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை முறியடிப்பு…!

அம்பாறை – பாலமுனையின் முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், பெரும்பான்மை இளைஞர்கள் சிலரும் எடுத்த முயற்சியால் அந்த பிரதேசத்தில்  பதற்றம் நிலவியுள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு வருகை தந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர், சிலை நிறுவும் ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும்  காணி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த போதே, இந்த முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், அட்டாளைசேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. அமானுல்லா, அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கின் கேடயம் அமைப்பினர், பிரதேச மக்கள் என பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதனையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன், அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டதுடன், அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பௌத்த சிலையை வைப்பது தொடர்பாக பிரதேச சபையில் எவ்வித அனுமதியும் பெறவில்லையென தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.

Gallery Gallery

Recommended For You

About the Author: admin