கர்ப்பவதி பெண் கொலை..! 5 வருடங்களின் பின் பிரதான சந்தேகநபர் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானசேகரன் ஹம்சிகா  என்ற 27 வயதான கர்ப்பவதி பெண் 2017ம் ஆண்டு தை மாதம் 24ம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் யாழ்.உரும்பிராயை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான நெடுந்தீவை சேர்ந்த 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தானும் ஏற்கனவே வேறொரு கொலை குற்றச்சாட்டில் சிறையில் உள்ள நபரும் இணைந்து கர்ப்பவதி பெண்ணான ஹம்சிகாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் கைதான நபர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சிலர் தொடர்பாகவும் விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருடைய தொலைபேசி அழைப்புக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews