உலக அரசியலின் போக்கு ஈரான் இஸ்ரேல் மீது நிகழ்த்திய தாக்குதலுக்கு பின்னர் அமைதி கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய அமைதிக்கு பின்னால் உக்ரைன்-ரஷ்சியா போர் தீவிரம் பெறுகின்றது. அதேவேளை மேற்காசியா போரின் தொடர்ச்சியும் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் மறுபக்கத்தில் ஹவுதி கிளர்ச்சி குழுவின் செங்கடல் கப்பல்கள் மீதான தாக்குதல் என போர்ச்சூழல் ஓய்வு நிலைக்கு செல்லவில்லை. குறிப்பாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்த இரு நாட்களில் லைபீரிய நாட்டு கொடியுடன் வந்த ‘எடர்னிட்டி சி’ என்ற சரக்கு கப்பல் மற்றும் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட கிரிஸால் இயக்கப்படும் ‘மேஜிக் சீஸ்’ என்ற கப்பலையும் தாக்கியுள்ளனர். மாறாக இஸ்ரேல் மேற்காசியாவில் நிகழ்த்திய போருக்கு ஒரு மட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது முழுமையான போர் முடிவாக தென்படவில்லை. இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் முக்கியமான அரசியல் நகர்வாக தெரிகின்றது. இக்கட்டுரையும் அத்தகைய அமெரிக்க-இஸ்ரேலிய உறவின் பிரதிபலிப்புகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்கள் இஸ்ரேலில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இருப்பதோடு, அதன் பொறியல் கட்டமைப்புகள் மீது நெருக்கடிமிக்க சூழலை உருவாக்கி விட்டது. ஈரானின் வளர்ச்சி இhணுவ ரீதியான வளர்ச்சியாக காணப்படுகிறது. இது மேற்காசிய பிராந்தியத்தின் அதிகார சமநிலையை மாற்றத்திற்கு உள்ளாக்கி விட்டது. இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுடனான தனது உறவையும் சர்வதேச மட்டத்தில் தனது நிலைத்திருப்பையும் அதிகம் முதன்மைப்படுத்த வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே இஸ்ரேலிய பிரதமரின் அமெரிக்க விஜயமும் தெரிகின்றது. அத்தகைய விடயத்தின் நோக்கங்களை தேடுவது அவசியமானது.
முதலாவது, அமெரிக்கா இஸ்ரேலிய உறவு என்பது நீண்ட நிலைத்திருக்கக் கூடிய பரஸ்பரம் நலன்கள் சார்ந்த இருக்கக்கூடிய உறவாகும். இஸ்ரேலின் உலகம் அமெரிக்கா என்பது சந்தேகம் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றே கூறலாம். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகவே ஏனைய நாடுகளுடன் உறவை கட்டமைக்க எல்லா காலத்திலும் செயற்பட்டுள்ளது. அவ்வாறே இஸ்ரேலின் இராணுவ நகர்வுகள் அமெரிக்காவின் நலன்களை பேணுவதுடன் பொருளாதார விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் அமெரிக்காவுக்கு அதிக பலத்தை கொடுக்கும் நாடாகவும் இஸ்ரேலும் யூதர்களும் விளங்குகின்றனர். எனவே பரஸ்பரம் நலன்களுக்குள்ளால் இரு நாட்டு உறவு பலப்படுத்தப்பட்டு காணப்படுகிறது. இதன் நீட்சியே சமாதானத்துக்கான உரையாடல்களும், அதனை அமுல்படுத்துவதற்கான நகர்வுகளும் நிகழ்ந்து வருகிறது. ஹமாஸ்-இஸ்ரேல் உடனான போர் நிறுத்த உடன்பாட்டை அதிகம் முதன்மைப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப், நெருக்கடிமிக்க சூழலை தளர்த்துவதற்கு முயன்று வருகின்றார். இதன் பிரதிபலிப்பாகவே நெதன்யாகுவின் அமெரிக்க விஜயமும் அமைகின்றது. இதில் முற்றுகையிடப்பட்டு குண்டுவீசப்பட்ட காசா பகுதியில் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 10 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் விடாப்பிடித்தன்மை காரணமாக ஒரு போர்நிறுத்தத்திற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் கடினமானவை என்று ஹமாஸ் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு ஈரான் உடனான மோதலில் அதிக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றது. அத்தகைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இஸ்ரேலுக்கு குறிப்பிட்ட காலப்பகுதி தேவையாக உள்ளது. மேற்காசியா முழுவதும் விமான தாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் தரை தாக்குதலையும் நிகழ்த்திய இஸ்ரேல் காசாவுடன் தனது தாக்குதலின் உத்திகளை மட்டுப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேலின் இருப்புக்கு மேலும் தம்மை சீர்செய்ய வேண்டி உள்ளமையை அதன் தரப்புகள் உணர்ந்து இருக்கின்றன. இதனால் அமெரிக்காவுடனான உறவை அடிப்படையாகக் கொண்டு அவ்வகை நெருக்கடியை எதிர்கொள்வது என்பது இஸ்ரேலின் தற்போதைய நோக்கமாகும். இராணுவ ரீதியில் நெருக்கடியான சூழலை கடந்து செல்வதற்கு அரசியல் ரீதியான உத்திகளை இஸ்ரேல் வகுக்கின்ற மரபை 1947ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றி வருகிறது. அவ்வகையான நெருக்கடிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பாரிய பிரச்சனையாக அமையவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது ஒரு நீண்டதும் அழிவுமிக்கதும் அதிக குழப்பத்தைக் கொண்டதுமான இராணுவ இருப்பை கட்டமைக்க வேண்டியதுமான ஒரு நெருக்கடியாக விளங்குகிறது. இதனால் அதனை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவின் அணுகுமுறைகள் இஸ்ரேலுக்கு அவசியமானதாகும். போர் நீடிக்கப்பட்டிருக்குமாயின் அதன் விளைவுகள் அபாயமானதாக இஸ்ரேலுக்கு அமைந்திருக்கும். அதனாலேயே அமெரிக்கா இப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மட்டுமின்றி, இழப்புகளை ஈரானுக்கு ஏற்படுத்தியதாக அறிவித்த போதும், அதன் உண்மை தன்மைகள் அமெரிக்காவை முதல் தர நாடு என்ற நிலையில் இருந்து பலவீனப்படுத்தியது. ஆனால் அதனுடைய பலவீனப்படுத்தலை ஒரு முன்னோக்கிய நகர்வாக மாற்றிக் கொள்வதற்கு போரின் முடிவு அல்லது நிறுத்தத்தை அமெரிக்கா சாத்தியப்படுத்தியது. எனவே நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் நெருக்கடிமிக்க சூழலில் அமெரிக்காவை போருக்குள் இழுத்தது மட்டுமின்றி போர் நிறுத்தத்துக்கான சூழலை ஏற்படுத்தியமைக்காகவும் பதிலளிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. அதுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை டொனால்ட் ட்ரம்புக்கு சிபார்சு செய்வதாக இஸ்ரேல் பிரதமரின் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. இது ஒரு வகையில் இஸ்ரேலை முழு நீள அழிவிலிருந்தும் நெருக்கடியில் இருந்தும் பாதுகாப்பதற்கான பரிசாகவே தெரிகின்றது. போரின் துயரங்கள் முடிவுக்கு வராத நிலையில் உலகம் முழுவதும் துயரங்களை ஏற்படுத்திய சக்திகளை அல்லது சக்திகள் தமக்கு இடையே சமாதானத்திற்கான நோபல் பரிசை பரிமாறிக் கொள்ளுகின்ற செய்முறை என்பது வேடிக்கையும் விநோதமான அரசியலையும் காட்டுகிறது. இதனையே கடந்த காலம் முழுவதும் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நிகழ்த்தி வந்தனர். சர்வதேச விதிகளையும் நியதிகளையும் கட்டமைத்து விட்டு அதற்கு செவி சாய்க்காத மதிப்பளிக்காத ஒரு செய்முறை ஒன்றை மேற்கு – அமெரிக்க கூட்டு நிகழ்த்தி வந்தது. அதை முன்னிறுத்தியே நெதன்யாகு டொனால்ட் ட்ரம்ப்க்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை சிபார்சு செய்துள்ளார். இது ஒருவகையில் சேபியன்ஸ் நூலின் ஆசிரியர் யுவல் நோவா ஹராரியின் ‘கற்பனை யதார்த்தங்களின்’ உச்சகட்ட வேடிக்கையாகவே அமைகின்றது. மனித குல பரிணாமம் கற்பனையான யதார்த்தத்திற்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு பரிணமித்துள்ளது. அதனோர் உச்சமான வேடிக்கையே சமகாலத்தில் அரங்கேறி வருகின்றது.
மூன்றாவது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இஸ்ரேலுக்கு எதிராக சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உலக நாடுகளிடம் இஸ்ரேலுடன் வர்த்தகம் மேற்கொள்வதை நிறுத்துமாறு கூறியுள்ளது. அத்தகைய கோரிக்கை இஸ்ரேலினை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துவதோடு, எதிர்கால இஸ்ரேலியர் இருப்பையும் காணாமல் செய்வதற்கான செய்முறை ஒன்றாகவே அமைகின்றது. மறுபக்கத்தில் மலேசிய அகதிகளுக்கான உணவு பரிமாற்றத்தை வழங்குவதற்கான செய்முறை ஒன்றை இஸ்ரேலின் திட்டமிடலுக்கு புறம்பாக மேற்கொள்வது என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்து. அது பற்றிய உரையாடல்களை நிகழ்த்தி வருகின்றது. இஸ்ரேலை போரினூடாக மட்டுமல்ல பொருளாதார வர்த்தக மனிதாபிமானச் சட்டங்களுக்கு ஊடாகவும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற சூழலை ஐக்கிய நாடுகள் சபை தொடக்கி இருக்கின்றது. இத்தகைய சூழலிலே இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். அதனுடைய நோக்கம் பொருளாதார அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஏற்பட உள்ள நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ளவும் முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிடுவதாக தெரிகின்றது.
எனவே, அமெரிக்க-இஸ்ரேலியா கூட்டு தற்காலிகமான பின்வாங்கலை எதிர்கொண்டு உள்ளது. அதிலிருந்து மீள்வதற்கான உத்திகளை வகுப்பதாவே இஸ்ரேலின் பிரதமரின் அமெரிக்க விஜயம் சர்வதேச அரசியலில் அவதானிக்கப்படுகின்றது. இத்தகைய விஜயத்தின் விளைவுகளை உலகளாவிய ரீதியில் நாடுகள் கண்டு கொள்ளுகின்ற வடிவத்தை விட ஒடுக்கப்பட்ட இனங்களும் தேசங்களும் அதிகமான விழிப்போடு அவற்றை புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஹமாஸ் மீதான தாக்குதலின் நிறுத்தம் என்பது ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதலின் எதிரொலிப்பாகவே தெரிகின்றது. இவற்றை கையாளுகின்ற சக்தியாகவே அமெரிக்காவும், அமெரிக்கா புலனாய்வுத் துறையும், அமெரிக்க ஜனாதிபதியும் காணப்படுகின்றனர். இதன் எதிரொளிப்புகளே உலகளாவிய அரசியலில் மௌனமான போக்குக்கான அடிப்படையாக தெரிகின்றது. இதனூடாக மேற்காசிய அரசியலின் போக்கு மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை வெளிப்படையாக உணரப்படுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-