யாழில் அதிகரித்துள்ள மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப் பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் தரம் 7 இல் பயிலும் மாணவனைக் கடந்த 9ஆம் திகதி வகுப்பாசிரியர் தாக்கியதில் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவன் காது மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன் மீதான தாக்குதல் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேவேளை, வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் பயிலும் மாணவனைச் சித்திரப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு நேற்று தண்டனையளித்துள்ளார்.

அதனால் குறித்த மாணவன் உள, உடல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெற்றோர் பாடசாலைக்குச் சென்றபோது மாணவனைத் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டுள்ளார்.

அவருக்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவானாலும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகளவு தடவை தோப்புக்கரணம் செய்ய வைப்பது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிரைப் பறிக்கும் வகையிலான சித்திரவதை என்று மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் அண்மையில் மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் தலையீட்டால் இணக்கத்துடன் முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin