பொத்துவில் – பொலிகண்டி பேரணி: நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சி அங்கத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்கள் என 32 பேருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்ந்த 2021, பெப்ரவரி 03ஆம் திகதி பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்கு எதிரான இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அது நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொத்துவில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மற்றும் திருக்கோயில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு என இரண்டு வழக்குகளுமே  பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன் போது குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ரூபா ஐந்து இலட்சம் சுய பிணை வழங்கி விடுதலை செய்ததோடு, வழக்கை எதிர்வரும் 2022, மார்ச் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 32, நபர்களின் பெயர் வாசிக்கப்பட்ட போதும் ஒன்பது பேர் மட்டுமே இன்று சமூகம் கொடுத்திருந்தனர். ஏனையவர்களுக்கு மீண்டும் அழைப்பாணை வழங்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு,  இணையத்தள உரிமையாளர் சயனோலிபவன் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளமை என்பது இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது இல்லை என்பதையே காட்டுகிறது என ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Gallery

Recommended For You

About the Author: admin