ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

சுயாதீன ஊடகவியலாளரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு நகரப்பகுதியில் குறித்த கண்டண ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாhளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews