முல்லைதீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்…..!

சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-09.30 மணியளவில் முல்லைத்தீவு நகரத்தில் கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

ஊடகவியலாளர் மீதான இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான சித்திரவதையை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாக கண்டித்துள்ளது.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் பரிசோதகரிடமும், 59 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வசந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இழக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதேவேளை, முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையைப் புகைப்படம் எடுக்க முற்பட்ட முல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது மாவீரரர் தின நாளான நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) இராணுவத்தினர் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடாத்தியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தாக்குதலுக்கு இலக்கான பகுதியில் பச்சை மட்டை ஒன்று முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.அருகில் உள்ள முட்கம்பி வேலி மீதும் ஊடகவியலாளரைத் தூக்கி வீசித் தாக்குதல் மேற்கொண்டமைக்குச் சான்றாக வேலியிலும் இரத்தக் கறைகள் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews