பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலில் 31 காயங்கள்! சட்டத்தரணி சுகாஸ் தொிவிப்பு.. |

 

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இருந்த சமயம் உயிரிழந்த விதுசன் என்ற இளைஞனின் உடலில் 31 காயங்கள் இருந்தமை நீதிமன்ற விசாரணைகளல் தொியவந்திருப்பதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து இளைஞர் ஒருவர் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பக்கட்டை விழுங்கியதால் அது வயற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் கூறப்பட்டது.

எனினும் அதனை குறித்த இளைஞனின் குடும்பத்தினர் மறுத்திருந்ததுடன் குறித்த இளைஞனை பொலிஸார் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

அதற்கமை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியரிடம் சடலம் அனுப்பிவைக்கப்பட்டது.  இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் விதுசனின் உடலில் 31வகையான காயங்கள் அறியக்கிடைத்துள்ளதாகவும் 

உயிரிழந்த இளைஞர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். பொலிஸார் தெரிவித்த விடயங்களுக்கு மாறான சம்பவம் குறித்த இளைஞனுக்கு பொலிஸ் காவலில் நடைபெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொலிஸார் ஏற்கனவே குறித்த இளைஞன் தற்கொலை செய்ததாக நீதிமன்றில் பொய்யான தகவலை வழங்கியிருந்தார்கள். அது பொய்யென்றும் குடும்பத்தினர் முன்பாக பொலிஸார் குறித்த இளைஞன் தாக்கப்பட்டிருந்தார் என்றும் நாங்கள் ஏற்கனவே நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தோம்.

அது இன்று உண்மையாகியிருக்கின்றது. நீதிமன்றம் இந்த வழக்கில் மிகவும் கரிசனையுடன் உள்ளதை நாங்கள் அவதானித்தோம். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியரின் இரண்டாவது உடற்கூற்று பரிசோதனை விரைவாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என நாங்கள் நம்புகின்றோம். உரிய அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என பொலிஸாருக்கு நீதிமன்றம் இறுக்கமான உத்தரவினை பிறப்பித்திருக்கின்றது.

சரியான நீதி கிடைக்கும் வரையில் நாங்கள் போராடுவோம் என தெரிவித்தார். இதேநேரம் குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் ஒத்துவைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews