வட-கிழக்கு ஆயர்கள் பேரவை விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்: யாழில் பொது அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்.

வட-கிழக்கு ஆயர்கள் பேரவை நவம்பர்-20 ஆம் திகதியைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கடைப்பிடிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என யாழில் நான்கு பொது அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

கிராமிய உழைப்பாளர் சங்கம், வடமராட்சி கிழக்குப் பிரஜைகள் குழு, மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், உலகத் தமிழர் தேசிய பேரவை ஆகியன இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை (15.11.2021) முற்பகல் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், வடமராட்சி கிழக்குப் பிரஜைகள் குழுவின் தலைவரும், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவருமான இ. முரளிதரன், உலகத் தமிழர் தேசிய பேரவையின் பிரதிநிதி சற்குணேஸ்வரி ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் வெளியிட்டனர்.

கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம் மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,

தாயகக் கனவுகளுடன் தமிழர்களின் விடுதலைக்காக மரணித்த மாவீரரின் நினைவு நாட்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலோ எவருடைய செயற்பாடுகள் அமைந்தாலும் நாங்கள் அதனை விரும்பவில்லை. இந்தக் காலப் பகுதி என்பது தமிழ்த் தேசிய ஆத்மாவுடனும், எங்கள் விடுதலைக் கனவுகளுடனும் ஒருங்கிணைந்ததொரு அடையாளம். தாயகத்தின் விடுதலையில் மிகவும் வலிமையான சக்திகளாக மாவீரர்கள் விளங்குகின்றார்கள். சாதி, மத, பிரதேசம் கடந்த ஒரு வலிமையான தமிழ்த்தேசிய அடையாளத்துடன் கட்டமைக்கப்பட்ட தாயகத்தின் அடையாளமாக இன்று எஞ்சி நிற்பது மாவீரர்களின் நினைவுகள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ்த்தேசியத்தின் ஒருமைப்பாட்டையும், அதன் வலிமையையும் சிதைக்கின்ற பல முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எங்களுடைய விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் தோல்வியுறுவதற்கு வலிமையான ஆயுதமாகப் பிரதேச முரண்பாடே கையாளப்பட்டது. இந்நிலையில் தற்போது வட-கிழக்கு ஆயர்கள் பேரவை நவம்பர்-20 ஆம் திகதியைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளமையானது எங்கள் தாயகக் கனவையும், தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டையும் ஏதோவொரு வகையில் சிதைக்கக் கூடிய அல்லது அசைத்துப் பார்க்கக் கூடிய ஆரம்பச் செயற்படாக அமைந்துள்ளது.

எங்கள் எதிர்காலச் சந்ததி தாயகக் கனவுக் கோட்பாட்டை அல்லது தமிழ்த் தேசியத்தின் வலிமையை உணராத வகையில் அல்லது கையிலெடுக்காத வகையில் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுகின்றனவா? என நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆயர்கள், அருட்தந்தையர்களின் பங்கேற்பு என்பது குறைத்து மதிப்பிட முடியாத மிகவும் வலிமையான, ஆரோக்கியமான பங்களிப்பாகவுள்ளது. அந்தவகையில் நாங்கள் அவர்களை மதிக்கின்றோம்.ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர் தமிழ்மக்களின் குரலாக சர்வதேச ரீதியில் பல செய்திகளை எடுத்துச் சொல்லி தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்காற்றிய மன்னாரின் முன்னாள் ஆயர் ஜோசப் ஆண்டகை மறைந்தாலும் அவருக்குரிய கெளரவத்தை தற்போதும் நாங்கள் வழங்கி வருகின்றோம். எனவே, அவரது வழியைப் பின்பற்றி ஏனைய ஆயர்களும், அருட்தந்தையர்களும் செயற்பட வேண்டும்.

எனவே, வட-கிழக்கு ஆயர்கள் பேரவை நவம்பர்-20 ஆம் திகதியைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கடைப்பிடிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், சந்தர்ப்பத்திலும் எங்கள் தாயகக் கனவுக்கு அல்லது தமிழ்த்தேசிய அடையாளத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் அவர்களின் எதிர்கால அணுகுமுறைகள் அமைய வேண்டும்.

நவம்பர்- 20 ஆம் திகதியைப் போரினால் இறந்த கிறிஸ்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கூறினாலும் இதுவும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதும், பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டியதும் ஆகும். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்ற வகையில் இவ்வாறான நாட்களை வேறுபடுத்தி அனுஷ்டிப்பதன் மூலம் எங்கள் இலக்கு நோக்கிய படிமுறைகளின் தடைக்கற்களாக எதிர்காலத்தில் நிச்சயம் மாறும். ஆகவே, இந்த விடயத்தை தொடர்ந்து நாங்கள் மக்கள் மத்தியில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வகையில் கொண்டு செல்லாமல் கடந்தகாலங்களைப் போன்று ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews