“ஒரே நாடு ஓரே சட்டம்’’ இன அழிப்பின் தொடர்ச்சியே! (சி.அயோதிலிங்கம்.)

“ஒரேநாடு ஒரேசட்டம்” என்பது ஜனாதிபதி கோட்டபாயவினது தேர்தல்
வாக்குறுதியாகும். இரண்டு வருடங்களாக அந்த வாக்குறுதி கிடப்பில்
போடப்பட்டிருந்தது. தற்போது  ஜனாதிபதி அதனைத் தூசுதட்டி எடுத்து செயலுக்கு
கொண்டுவர முனைகின்றார். இதற்காகவே செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
செயலணியின் பணிகளாக “ஒரேநாடு ஒரேசட்டம்” என்பதை
செயற்படுத்துவதற்கான சட்ட வரைபு ஒன்றை வரைதல். நீதி அமைச்சினால்
இதற்காக தயாரிக்கப்பட்ட சட்ட வரைபுகளை பரிசீலனை செய்து திருத்தங்களை
மேற்கொள்ளதல் என்பன இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சட்டம் தொடர்பான பணிகளுக்கு ஒரு பௌத்த பிக்கு தலைமை தாங்கக் கூடிய தகுதியைப் பெற்றவரா?  என்பதற்கு ஜனாதிபதிதான் பதிலளிக்க வேண்டும்.
இச் செயலணி ஞானசாரதேரரை தலைமையாகக் கொண்டு 13 பேரை உள்ளடக்கியதாக
அமைக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கடந்த 26ம் திகதி வர்த்தமானி மூலம்
இதனை வெளிப்படுத்தியுள்ளார். இச் செயலணியின் செயலாளராக
ஜனாதிபதியின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாயக்கா
நியமிக்கப்பட்டடுள்ளார்.

செயலணியில் 13 பேரில் 4 பேர் முஸ்லீம்கள் ஏனைய 9பேரும்
சிங்களவர்கள். தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. மலையகத்
தமிழரில் இருந்தும் எவரும் நியமிக்கப்படவில்லை. இத்தனைக்கும் பெரும்
தோட்டத்துறையில் கம்பனிகளின் சட்டமே அதிகளவில் செயற்படுகின்றது.
வெளியேயுள்ள தொழிலாளர் சட்டங்கள் அங்கு பெரியளவிற்கு இல்லை.
உள்ளுராட்சி சபை பெரும்தோட்டங்களில் செயற்படுவதற்கான சட்டங்கள்
நிறைவேற்றப்பட்டபோதும் போதியளவிற்கு இன்னமும் நடைமுறைக்கு
வரவில்லை. “ஒரேநாடு ஒரேசட்டம்” நடைமுறைக்கு வந்தாலும் பெரும்தோட்டத்துறையில் அவை நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புக்கள்
எவையும் இல்லை.

தமிழர்கள் எவரும் நியமிக்கப்படாமைக்கு தலையாட்டி பொம்மைகள் எவரும்
கிடைக்காமை காரணமாக இருக்கலாம். தமிழ்த்தேசியம் ஆழமாக வேரூன்றிய
மரமாக இருப்பதால் தமிழ்ப்புலமையாளர்கள் பெரும் தேசியவாத நிகழ்ச்சி
நிரலுக்குள் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். துரோகிப் பட்டத்தை
தமிழ் மக்களிடம் கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.
தமிழர் ஒருவர் பிதிநிதியாக செல்வதால் எந்தப் பயனும் கிடைக்கப்
போவதில்லை. ஏனெனில் அங்கு அவர்களுக்கு தீர்மானிக்கும் அதிகாரம்
இருக்காது. பிரதிநிதிகளும் தங்களுடைய கதிரை காப்பாற்றப்பட வேண்டும்
என்பதற்காக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அங்கு வலியுறுத்தவும்
மாட்டார்கள். ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதியாக தீர்மானிக்கும்
அதிகாரத்துடன் சென்றால்தான் அவர்களால் ஏதாவது செய்ய முடியும். கடந்தகால
ஆணைக்குழுக்களில் இதுதான் நடந்தது.
தேசியக் கொடியை உருவாக்கும் குழுவில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் நடேசன்
ஆகிய இரு தமிழர்கள் இருந்த போதும் தமிழ் மக்களுடைய நலன்களை தேசியக்
கொடியில் பேண முடியவில்லை. நடேசன் தமிழ மக்களுடைய நலன்கள்
பேணப்படவில்லை என்பதற்காக குழுவில் இருந்து வெளியேறினார் என்பது
வரலாறு.  சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது தொண்டமான்
ஆளும் கட்சியில் நியமன உறுப்பினராக இருந்தபோதும்  ஒப்பந்தத்தை
அவர் எதிர்த்த போதும் அவரால் அதனை தடுக்க முடியவில்லை. 1972ம் ஆண்டு
அரசியல் யாப்பு தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து
சட்ட ரீதியாக தூக்கி வீசப்பட்ட யாப்பு.

இது உருவாக்கப்பட்ட போது செல்லையா குமாரசூரியர், எம்.சி.சுப்பிரமணியம் ஆகிய இருவர் அரசாங்கத்தில் நியமன உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் அவர்களால்
தமிழ் மக்களுக்கு எதிரான யாப்பை தடுக்க முடியவில்லை
எனவே வெறுமனே அங்கத்தவராக இருப்பது எந்த வகையிலும் பயன்களைத் தராது
என்பதே வரலாற்றப் பட்டறிவாகும். தற்போது உப குழுவில் மட்டும் பிரதிநிதித்துவம் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று ஞானசார
தேரர் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையில்
தேர்தல் வாக்குறுதியை ஜனாதிபதி இப்போது தான் தூசி தட்டி எடுத்துள்ளார்.
இதற்கு அண்மைக் காலமாக அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகளே
காரணமாக இருக்கலாம்,  விலைவாசிப் பிரச்சினை, உரப்பிரச்சினை,
ஆசிரியர்களின் தொடர் போராட்டம், கெரவலப்பிட்டிய மின்
நிலையத்தில் அமெரிக்காவிற்கு 41 வீதப் பங்கு வழங்கியமை என பல
தலையிடிகள் அரசாங்கத்திற்கு எழுந்துள்ளன.

இந்தத் தலையிடிகள் தமிழர்களிடமிருந்து வந்திருந்தால் ஜனாதிபதி கொஞ்சம்
சுதாகரித்திருப்பார். ஆனால் அவை எல்லாம் ஜனாதிபதியை தெரிவு செய்த
சிங்கள வாக்காளரிடமிருந்தே வந்திருந்தன. குறிப்பாக ஜனாதிபதியை
வெற்றிபெறச்செய்த பெருந்தேசியவாதிகள் கடுமையாக
அதிர்ப்தியடைந்துள்ளனர். தற்போது எதிர்க்கட்சிகளை விட ஜனாதிபதியை
ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களிடமிருந்தே போர்க்கோலம் அதிகமாக
உள்ளது. தனது விகாரையையே மொட்டு அணியின் பிரச்சாரத்திற்கு வழங்கிய
ஆனந்த தேரர் இப்போர்க்கோல முயற்சியில் முன்னணியில்
நிற்கின்றார்.

தமிழ் மக்களுக்கு பொருளாதாரக் கஸ்டங்கள் பெரியவையல்ல. நீண்ட போர்
காரணமாக பொருளாதார கஸ்டங்களுக்கும் ஏனைய நெருக்கடிகளுக்கும் அவர்கள்
பழக்கப்பட்டவர்கள். எந்தச் சூழ்நிலையோடும் இசைவாக்கம் அடையக் கூடியவர்கள்.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை உரப்பிரச்சினை என்பன அவர்களுக்கு
கஸ்டங்களைத் தந்தபோதும் சிங்கள மக்களைப் போல நிலைகுலையவில்லை

எனவே சிங்கள மக்களைக் குறிப்பாக பெருந்தேசியவாதிகளை திருப்திப்படுத்த
வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு உள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைக்
கையிலெடுப்பதன் மூலமும் அதற்குத் தலைமை தாங்குவதற்கு தீவிர
பெருந்தேசியவாதியான ஞானசார தேரரரை நியமித்ததன் மூலமும் அவர்களைதிருப்திப்படுத்த முனைந்துள்ளார்.

இது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை
தூக்கிப்பிடிப்பதற்கு முதலாவது காரணம். இரண்டாவது காரணம் முதலாவதன் தொடர்ச்சிதான். நிலைமைகளை இன்னொன்றாக மடைமாற்றம் செய்வது தான் அது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் சிங்கள மக்களின் அனைத்துப் போராட்டங்களையும் திசை திருப்ப
முற்படுகின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற விடயம் தமிழ், முஸ்லீம் மக்களைப்
பொறுத்த வரை அவர்களது இருப்பு சார்ந்தது. ஒரு தேசிய இனத்தை தாங்கும்
தூண்களாக இருப்பவை நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம்
என்பவையே. இவற்றில் ஒன்று அழிந்தாலும் தேசிய இனத்தின் இருப்பு
ஆட்டம் கண்டு விடும். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயம் தமிழ், முஸ்லீம்
மக்களின் கலாச்சாரத் தூணுடன் தொடர்புபட்டவை. அவர்களுடைய வழக்காற்றுச்
சட்டங்கள் மக்களை ஒன்றிணைக்கின்ற  ஒன்றாக அடையாளப்படுத்துகின்ற ஒரு
வலுவான கருவிகளாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேச வழமைச்சட்டம் காலம் காலமாக
நடைமுறையிலுள்ள ஒரு வழக்காற்றுச்சட்டமாகும். வடமாகாணத் தமிழர்கள்
அச்சட்டத்தினால் ஆளப்படுகின்றனர். அது ஒரு ஆள்சார் சட்டமாக
இருப்பதனால் வடமாகாணத் தமிழாகள் இலங்கையின் எப் பாகத்திற்குச்
சென்றாலும் அதுவும் கூடவே செல்லும். அச் சட்டத்தில் பெண்கள் விவகாரம்
தொடர்பாக சில குறைபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களை கூட்டாக
அடையாளப்படுத்துவதில் அது பெரும் பங்கு வகிக்கின்றது.

திருமணம் செய்த பெண்கள் கணவரின் சம்மதத்துடனேயே ஒப்பந்தங்களில்
கையெழுத்திட முடியும் என்பது பெண் ஒடுக்குமுறை சார்ந்தது தான். இது
திருத்தியமைக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக கருமமாற்ற வழி விட வேண்டும்
என்பது நியாயமான கருத்துத் தான். ஆனாலும் தேச வழமைச் சட்டத்திலுள்ள தேடிய
தேட்டம், சீதனம் சார்ந்த ஏற்பாடுகள் பெண்களின் சொத்துரிமையை வலுவாக
பாதுகாப்பனவாக உள்ளன.

தேடிய தேட்டம் என்பது திருமண காலத்தில் தேடிய சொத்துக்களாகும். இது
கணவனால் அவரது பணத்தில் வாங்கப்பட்ட சொத்தாக இருந்தாலும் அரைவாசிப்
பங்கு மனைவிக்குரியது. கணவன் இறந்தாலும் கணவனின் பங்கிலும் அரைவாசி
மனைவியைச் சேர ஆதனத்தின் ¾ பங்கு மனைவிக்கு சேரும். ¼ பங்கே
பிள்ளைகளுக்குச் சேரும். திருமண இடைக்காலத்தில் கணவன் மனைவியை விட்டுச்
சென்றாலும் மனைவிக்கு சொத்துப் பாதுகாப்பு உண்டு.

தவிர சீதனம் சம்பந்தமான தேசவழமைச்சட்ட ஏற்பாடுகளும் முக்கியமானவை.
சீதனம் தொடர்பாக ஆண்களையே அனைவரும் குற்றம் சாட்டுவதுண்டு. ஆனால்
சீதனச் சொத்துக்கு கணவன் உரியவர் அல்லர். அவர் வெறும் பாதுகாவலன்
மட்டுமே! அது முழுக்க முழுக்க மனைவிக்கே சொந்தமானது. மனைவி இறந்தால்
சொத்து பிள்ளைகளுக்கே போய்ச் சேரும். கணவருக்க எந்தப் பங்கும் இல்லை.
பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவியின் பெற்றோருக்கு செல்லுமே தவிர
கணவருக்கு செல்லாது.

தேச வழமைச் சட்டத்தை விட காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும்
வழக்காறுகளும் சட்டமாகக் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக திருமணப்பதிவு
இல்லாத போது வழக்காற்றுச் சடங்கின்படி திருமணம்
நிறைவேற்றப்பட்டிருந்தால் அத் திருமணம் செல்லுபடியானதாக இருக்கும்.
வடமாகாணத்திலுள்ள சொத்துக்கள் அனைத்தும் தேச வழமைச் சட்டத்தினாலேயே
ஆளப்படும். இவை வடமாகாணத்திலுள்ள ஆதனங்களுக்கு பாதுகாப்பையும்
வழங்குகின்றது.

கிழக்கில் முக்குவர் சட்டம் முன்னர் வழக்காற்றுச் சட்டமாக இருந்தது.
தற்போது அச் சட்டம் பெரியளவிற்கு நடைமுறையில் இல்லை. ஆனாலும்
கிழக்கில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற வழக்காறுகள்
சட்டமாகக் கொள்ளப்படுகின்றன. மீன்பிடித் தொழிலில் பல வழக்காறுகள்
சட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

முஸ்லீம்கள் ஒரு வலுவான பண்பாட்டுச் சமூகமாவர். முஸ்லீம் சட்டம் அவர்களைப் பொறுத்தவரை பிரதான வழக்காற்றுச் சட்டமாக உள்ளது. திருமணம்,
சொத்து போன்றவை முஸ்லீம் சட்டத்தினாலேயே ஆளப்படுகின்றன. ஒரே
நாடு ஒரே சட்டம் அவர்களையே அதிகம் பாதிக்கக் கூடியது. காதி
நீதிமன்றங்கள் நிறுத்தப்படக் கூடிய அபாயங்கள் உண்டு. முஸ்லீம்
பெண்களின் உடைகள் தொடர்பாகவும் நெருக்கடிகள் வரலாம்.

மொத்தத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் தேசிய இருப்பை சிதைத்து ஒரு
சிதைந்த இனக் குழுக்களாக மாற்றும் அபாயம் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கு
உள்ளது. இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது. ஏனையவர்கள்
இங்கு வாழலாம் ஆனால் தேசிய இனமாக எழுச்சியடையக் கூடாது என்ற
பெருந்தேசியவாதிகளின் நீண்டகால இலக்கே இங்கு அமுலாக்கப்படப்
போகின்றது. இந்த வகையில் இதனை ஒரு இன அழிப்பு என்றே கூறலாம்.
இன அழிப்பு என்பது முன்னரும் கூறியது போல நிலப்பறிப்பு,
மொழிப்புறக்கணிப்பு, பொருளாதார அழிப்பு, கலாச்சார சிதைப்பு
என்பனதான். சிறீலங்கா அரசு இந்த நான்கு தூண்களையும் தொடர்ச்சியாக
சிதைக்கும் கைங்கரியத்தில்  ஈடுபட்டு வருகின்றது.
ஞானசார தேரர் செயலணியின் தலைவராக முன்னரே கூறியது போல
நியமிக்கப்பட்டமைக்கு பலத்த விமர்சனங்கள் வந்திருக்கின்றன. தமிழ்.
முஸ்லீம் மக்களுக்கு எதிராக பச்சையாக இனவாத்தை தூண்டுபவரை எவ்வாறு தலைவராக
நியமிக்கலாம் என்றே விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். தமிழ்
மக்களைப் பொறுத்தவரை செயலணியின் நோக்கமே தவறானது. தவறான
செயலணிக்கு யார் தலைவராக இருந்தால் என்ன? விளைவு ஒன்றுதான். இன
அழிப்புத் தான் அந்த விளைவு. தமிழ்-முஸ்லீம் மக்கள் ஐக்கியப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews