வடக்கிற்க்கு 253 வைத்தியர்கள்புதிதாக நியமனம்….

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 62 வைத்தியர்கள் உட்பட வடமாகாணத்தில் 253 வைத்தியர்  நியமனங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் மிக மோசமான பற்றாக்குறை காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரு தொகுதி வைத்தியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனத்தில் வடமாகாணத்திற்கு 253 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 62 வைத்தியர்களும், வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு 191 வைத்தியர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு 57 பேரும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 28 பேரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 24 பேரும், மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 35 பேரும், வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 47 பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews