தமிழரசு கட்சி இந்தியாவை சீண்டுகிறது….மறவன்புலவு சச்சிதானந்தம்!

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி என சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத இந்திய இழுவை மடி படகுகளின் வருகையினை நிறுத்த கோரி இன்று நடாத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடகடல் என்பது பாக்குநீரிணை,தென்கடல் என்பது மன்னார் வளைகுடா.  இரண்டையும் சரிசமமாக கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு. 1976உக்கு முன்னர் இத்தகைய எல்லைக் கோடு இருந்ததே இல்லை.

தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லை கோட்டை தாண்டி வருகிறார்கள்.அது உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா?

உலகெங்கும் பல்வேறு இடங்களில் இத்தகைய உள்ளக கடல்கள் உள்ளன. அவற்றை ஊடறுத்துச் செல்லும் அனைத்துலக எல்லைக் கோடுகளும் உள்ளன.

இத்தகைய உள்ளகக் கடல் எல்லைகள் அனைத்துலக உடன்பாடுகளுள் அடங்கா. சிறப்பாகச் சில ஆண்டுகளுக்கு முந்தைய கராக்காசு அனைத்துலக கடல்வள உடன்பாட்டுக்குள் வடகடல் அடங்காது. தென் கடலின் தெற்குப்பகுதி வரக்கூடும்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை.

இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம்.

தனுக்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 22 கிலோ மீட்டர் தொலைவு. எந்திர வள்ளம் ஒன்றை முடுக்கிய அரை மணி நேரத்தில் தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் – கோடிக்கரைக் கடல் தொலைவும் அத்தகையதே.

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே.

நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். இரண்டாவது வாசிப்பு வரை அச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்தது.

அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன். தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தொப்புள்கொடி உறவுகளுக்கு அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறாரே என நான் வருந்தினேன்.

என் அருமைத் தம்பி சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

என் அருமைத் தம்பி மாவை சேனாதிராசாவிடம் சொன்னேன்  அவ்வாறான ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்ததா என மாவை சேனாதிராசா என்னிடம் கேட்டார். நான் சட்ட மூலத்தின் வரிகளைக் காட்டினேன். தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தீங்காக அமையுமே என்றேன்.

மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுத்தார் போலும்! நாடாளுமன்றத்தில் பின்னர் அச்சட்டமூலத்தைச் சுமந்திரன் முன்னெடுக்கவில்லை

அதே சட்டமூலத்தைப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவரைச் சுட்டுக் கொல்வோம் என்றார், தமிழரசின் ஆதரவுடன் நல்லாட்சியாளர் பிரதமர் இரணில்.

அச்சட்டத்தையே அமைச்சர் இடக்ளசு தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி!

எந்த முகத்தோடு பாரதம் இலங்கைத் தமிழருக்கு உதவவேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி.

சுமந்திரனை அறிவோம். இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை அறிவோம். தில்லியில் என்னிடமும் மட்டக்களப்பு யோகேசுவரனிடமும் கூறியவர் தமிழரல்லாத பாரதீய சனதாக் கட்சி மேலிடத்தார்.

சுமந்திரனை ஏன் இன்னமும் வைத்திருக்கிரீற்கள்? தமிழரசுக் கட்சி சார்பில் சென்னையில் தமிழக பாரதீய சனதாக் கட்சியைச் சந்தித்த சத்தியலிங்கத்திடமும் குகதாசனிடமும் கேட்டோர், தமிழக பாரதீய சனதாக் கட்சித் தலைவர்கள்.

மாவை சேனாதிராசாவையும் சிறீதரனையும் சாணக்கியனையும் அந்தப் பட்டியலில் இந்திய அரசியல்வாதிகளும் ஆட்சியாளரும் இன்று முதலாகச் சேர்த்துக் கொள்வர். முதுகில் குத்துவதும் அதே நேரத்தில் ஆதரவு கேட்பதும் ஈழத் தமிழரின் இயல்பு என இந்திய அரசியலாரும் ஆட்சியாளரும் என்னிடம் பலமுறை கூறுவர் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews