ஒற்றையாட்சியை வலிந்து திணிக்காதீர்கள்” சர்வதேச சமூகத்திடம் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை!

ஒற்றையாட்சி நிராகரித்தமையால் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள, வடக்கின் மக்கள் பிரதிநிதி ஒருவர், முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடுவதன் நோக்கம் படுகொலையில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வதற்காக மாத்திரமல்ல எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஒற்றையாட்சியை நிராகரித்து, சுயநிர்ணயம் மற்றும் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அனைவரும் இணைந்து கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பதை நாங்கள் சந்தித்தமைக்கு பிரதான காரணம் நாங்கள் ஒற்றையாட்சியை நிராகரித்து, ஒற்றையாட்சியை எதிர்த்து நின்று தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தியதாலேயே நாம் அந்த பேரவலத்தை சந்தித்தோம். ஆகவே அந்த நாளில் அங்கு ஒன்று கூடுகின்றோம் என்றால் வெறுமனே இறந்தவர்களை நினைவுகூறுவதற்காக அல்ல மாறாக நாங்கள் அந்த நாள் வரை ஏற்க மறுத்த ஒற்றையாட்சியை தொடர்ச்சியாக நிராகரித்து 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக நிராகரித்து தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை நாங்கள் எல்லோரும் இணைந்து வலியுறுத்த வேண்டும். ”

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் மிக மோசமான போர்த் தாக்குதலின் 15ஆவது நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் என்பது போரின் இறுதி நாட்களில் இலங்கை அரசாங்கத்தால் மோதலற்ற வலயமாக அறிவிக்கப்படட்ட கரையோர நிலத்தின் குறுகிய பகுதியாகும். அங்கு சிக்கியிருந்த  பல்லாயிரக்கணக்கான நிராயுதபாணிகளான தமிழர்கள் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்டமைக்காக அவர்கள் கோரும் நீதி இதுவரை கிடைக்கவில்லை.

தமிழர்கள் கோரும் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்ற செய்தியை இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு அறிவிக்கும் ஒரு நாளாக இந்த வருட நினைவேந்தல் நாளை தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவுக்கும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் தெளிவான ஒரு செய்தியை சொல்ல வேண்டும். ஒற்றையாட்சியை எங்கள் மீது திணிக்காதீர்கள். 13ஆவது திருத்தத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள் அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.  இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகியுங்கள். அதுவரை நாம் உரிமைக்காக போராடிக்கொண்டிருப்போம்.  ஒருபோதும் எமது நிலைப்பாட்டை கைவிடமாட்டோம் என்பதை ஆணித்தனமாக இந்த சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்கான ஒரு நாளாக 15ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்காலை நோக்கி நாம் நகர வேண்டும்.” என்றார்.

இலங்கைத் தமிழர்களின் கருத்துக்களுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

“எங்களுடைய கருத்துக்களை செவிமடுக்க சர்வதேச சமூகம் தயாராக இல்லை. 15 ஆண்டுகளாக சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கேட்டபோது எங்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளக  பொறிமுறைக்குள் இந்த சர்வதேச சமூகம் இந்த பொறுப்புக்கூறலை முடக்கி வைத்துள்ளது.”

தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிம்மதியாக வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என வலியுறுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

“எங்கள் மீது இனப்படுகொலை செய்த இலங்கை அரசு தான் செய்த படுகொலைகளுக்கு தன்னைத்தானே விசாரணை செய்து ஒருபோதும் தன்னைத் தானே தண்டிக்கப்போது இல்லை. தீர்வு கிடைக்கப்போவது இல்லை.  எங்களை போருக்கு பின்னர் நிம்மதியாக வாழ விடுவதற்கு தயாரில்லை. கட்டமைப்பு சார் இனவழிப்பு நடந்துகொண்டிருக்கிறது.  போரால் அழிந்த வடக்கு கிழக்கை அரசு 15 ஆண்டுகளாக புறக்கணித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 2023 வரவு செலவுத் திட்டத்தில் கூட போரால் அழிந்த வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப 2 வீதம் கூட ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.”

தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கில் இன்னமும் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழர்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பதை நிறுத்தத் தயாரில்லை. பௌத்த மயமாக்கலை நிறுத்தத் தயாரில்லை. சிங்கள மயமாக்கலை நிறுத்தத் தயாரில்லை. கைதுகள், சித்திரவதைகளை நிறுத்தத் தயாரில்லை. இவ்வாறான ஒரு சூழலில் சர்வதேச சமூகமும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கத் தயாரில்லை.”

Recommended For You

About the Author: Editor Elukainews