யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச மற்றும் தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அலுவலகர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அலுவலகர்கள், பொலிசார் உள்ளிட்ட அதிகாரிகள் இன்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து அரச மற்றும் தனியார் நெடுந்தூர பஸ் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் நிலவிவரும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு கௌரவ ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, வட மாகாண பிரதம செயலாளர் திரு. இ. இளங்கோவன் அவர்களால் இதன்போது சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் நெடுந்தூர பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நேர அட்டவணையை தயாரிக்க கால அவகாசம் தேவை என பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதுடன்,  எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்கீழ், நெடுந்தூர  சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ்களின் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews