மதகுருமார்களுக்காக இயங்கும் மன்னார் அரச அதிகாரிகள். விவசாயிகள் கவலை.

மாகாண அல்லது மத்தியஅரசு கூறும் விடயத்தை மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் யாரும் நடைமுறைப்படுத்தாமல் மதகுருமார்களுக்காக மாத்திரம் செயற்படும் நிலை காணப்படுவதாக மன்னார் கோவில்மோட்டை விவசாயிகள் தெரிவித்தனர்.

மன்னார் கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக வவுனியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கோவில்மோட்டைக்காணிக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்த ஆவணங்களும் பங்கு தந்தைகளிடத்தில் இல்லை. மடுப்பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்தவிடயத்தை நாம் முன்வைத்த போது இது அரச காணி என்றே உதவி பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை எமக்கே வழங்குமாறு கோரியபோது, அந்தக்காணி வனவள திணைக்களத்திடம் இருப்பதாக சொல்லப்பட்டது. எனினும் விவசாயிகளின் நலன் கருதிமாத்திரம் அதனை விடுவித்து தரலாம் என வனவளத்திணைக்களம் அன்று தெரிவித்திருந்தது. அதற்கமைய விவசாயிகள் அனைவரும் மாகாண வனவளத் திணைக்களத்திடம் விடுத்த கோரிக்கைக்கமைய அந்தக்காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.

விடுவிக்கப்பட்ட பின்னர்
அந்தகாணிகளை விவசாயிகளுக்கே வழங்குமாறு வடமாகாண ஆளுனரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
ஆயினும் மாகாண நிர்வாகமோ அல்லது மத்திய அரசு கூறும் விடயத்தை மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் யாரும் நடைமுறைப்படுத்தவில்லை.
மதகுருமார்களுக்காக இயங்குகின்ற அரச உத்தியோகத்தர்களே மடுவிலும், மன்னார் மாவட்டத்திலும் உள்ளனர். இந்த நிலை மாற்றம் பெறவேண்டும்.

நாம் விவசாயத்துக்காக கிணறு தோண்டும் போது உதவி ஆணையாளர் அதனை தடுத்திருந்தார். பின்னர் அதே ஆணையாளர் கிணற்றை தூர்வாருவதற்கு அனுமதியினை வழங்குகின்றார். நாம் விவசாயிகள் இல்லாவிடில் அவரால் எப்படி அந்த அனுமதியினை வழங்கமுடியும் என்று கேட்க விரும்புகின்றோம்.

கோவில்மோட்டை காணியை விவசாயிகளுக்கே வழங்குமாறு மாகாண அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் சொல்கின்றது. இதனை பிரதேச செயலாளர் நடைமுறைப்படுத்தவில்லை. அதனை செய்யாதமையினால் எங்களுக்கும் பங்குத்தந்தைக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே பண்படுத்திய சிறுபோக காணியினை மீண்டும் உழுது பயிர்களை நாசமாக்கி ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் எமது வயல்காணியில் நாம் வேலை செய்தால் காட்டை எரிப்பதாகசொல்லி பொலிசாரை அனுப்பி நடவடிக்கை எடுக்கின்றனர். அல்லது காட்டை அழிப்பதாக கூறி இராணுவத்தை அனுப்புகின்றனர்.

தங்களுக்கு காணி வேண்டும் என்று கூறும் பங்குத்தந்தையர்கள் இதுவரை கோவில்மோட்டையை சேர்ந்த 27 விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்வதற்கு உடன்படவில்லை. வெறுமனே விக்கடர்சோசை, பப்பிசோசை, அன்ரனி சோசை ஆகியோர் சொல்வதனை கேட்டு அந்தக்காணி தங்களுக்கு சொந்தம் என ஆயர் சொல்கின்றார்.

மன்னார் மாவட்ட ஆயர் ராகம பகுதியில் இருந்து வருகைதந்து இரண்டு வருடங்களே ஆகின்றது. கோவில்மோட்டை விவசாயக்காணி பற்றி அவருக்கு சரியாக தெரியாது.

இயந்திரங்கள் அற்றநிலையில் மனித வலுவினை மாத்திரம் பயன்படுத்தி நீண்டகாலமாக அந்தக்காணியினை பராமரித்த எம்மை காணியைவிட்டு வெளியேறுமாறு சொல்லும் நிர்ப்பந்தநிலை இன்று ஏற்பட்டுள்ளது.

நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மதம் எமது வழிபாடு. விவசாயம் எமது வாழ்வாதாரம். எனவே விவசாயிகளுக்கே குறித்த காணியினை வழங்குமாறு உரிய அதிகாரிகளை கேட்டுநிற்கின்றோம் என்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews