சுமந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை!!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவைக் கோரும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்கள் உள்ளடக்கப்படாத நிலையில் சட்டமா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அதற்கு அங்கீகாரம் வழங்கியதை சவாலுக்கு உட்படத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று (20) உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இதன் போது தொடர்ந்தும் குறிப்பிட்டதாவது, தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.

எனவே அதில் உச்சநீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின் 126ஆவது பிரிவின்படி ஒரு நிர்வாகம் அல்லது நிர்வாக நடவடிக்கை ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ய முடியும். அத்தகைய நடவடிக்கை எதுவும் இங்கு நடைபெறவில்லை.

அதன்படி, அரசியலமைப்பின் தொடர்புடைய பிரிவின் கீழ் ஒரு மனுவை சமர்ப்பிக்க எந்த சட்ட ஏற்பாடும் இல்லை. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு மனு தாக்கல் செய்வது சட்டத்திற்கு முரணானது.

எனவே, இந்த முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்று, மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மனுதாரர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இங்கு எந்த நாடாளுமன்ற சட்டமும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. சபாநாயகரின் ஒரு செயல்பாடு மட்டுமே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி சபாநாயகர் செயல்படவில்லை. இந்த மசோதாவில் சபாநாயகர் கையெழுத்திட்ட போது , நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தது. அதன்படி, இது நிர்வாக நடவடிக்கை வகையின் கீழ் வருகிறது.

இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.அதன்படி, இந்த மனுவை விசாரிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கருத்தில் கொண்டு, மனுவை விசாரிக்கலாமா வேண்டாமா என்ற உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews