பிரதி கல்வி பணிப்பாளர் மீது தாக்குதல்…! கிழக்கில் கண்டன போராட்டம்

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று (21) கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால்  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண  பிரதி கல்வி பணிப்பாளரை  இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதியொருவர்,  கடமை நேரத்தில் தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரதி கல்வி பணிப்பாளர்,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடாத்திய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி மாகாண கல்வித் திணைக்களத்தில்  2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான மேல்முறையீட்டு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிரசன்னமாக இருந்த  மேல் முறையீட்டு சபையின் பிரதிநிதி இல்லாத இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் பீ.உதயரூபன் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முதல் மாகாண கல்வி பணிப்பாளரை நோக்கி இழிசொல் பிரயோகம் செய்ததுடன், பிரதி  கல்வி பணிப்பாளரை தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்து அலுவலக ஊழியர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அத்துடன், இப்போராட்டத்தை தொடர்ந்து இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.யீ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்ஙவிடம் மகஜர் கடிதத்தையும் கையளித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews