கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(13) ஓய்வு பெறுகின்றார்.
இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை  நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட  செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த மணிவிழா நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மணிவிழா நாயகி அழைத்து வரப்பட்டதை அடுத்து, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் அவரது சேவையை பாராட்டி பலரும் வாழ்த்துரை நிகழ்த்தினர். தொடர்ந்து உதவி பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கரைச்சி உதவி அரசாங்க அதிபர், வட கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவி செயலாளர், முகாமைத்துவ பயிற்சி நிலைய பயிற்சி உத்தியோகத்தர், மட்டக்களப்பு கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி, தொடர்ந்து தற்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமை ஆற்றிவரும் இவர் தனது அரச பணியினை நாளையுடன் நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கிளிநொச்சி மாவட்டம் 1984 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், அந்த மாவட்டத்திலிருந்து அரச நிர்வாக சேவைக்கு தெரிவான முதலாவது நிர்வாக சேவை அதிகாரி இவரென்பது விசேட அம்சமாகும்.
இலங்கை அரச நிர்வாக சேவையில் இவர் தொடர்ச்சியாக 32 வருடங்கள் கடமையை நிறைவேற்றியதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகவும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா, ஜனாதிபதி செயலக மேதிக செயலாளர் இளங்கோவன், அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஓய்வுநிலை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில், வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலர் Zoom தொழில்நுட்பம் ஊடகவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து ரூபவதனம் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மணிவிழா நாயகியின் வரலாற்று தடங்கள் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews