இலங்கையில் இன்று அறிமுகமாகும் UPI என்றால் என்ன..?

(Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மொரிஷியஸிலும், இலங்கையிலும் இந்த கொடுப்பனவு முறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (12) இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ மாநாடு ஊடாக பங்கேற்புடன் நடைபெறவள்ளது.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நவுத் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

அதனூடாக பணப் புழக்கமில்லாத பொருளாதார கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் வரி செலுத்தாமல் இருப்பதற்கு காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு இவ்வாறான முறைமைகள் உதவியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த UPI முறைமையினூடாக பொது மக்களுக்கு தமது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை மெய்நிகர் (virtual) டெபிட் அட்டையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

பொது மக்களுக்கு இம்முறையைப் பயன்படுத்துவதனூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக பணத்தை அல்லது அட்டைகளை பயன்படுத்த வேண்டியிருக்காது. தமது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை டெபிட் அட்டையாக பயன்படுத்தி, பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் முடியும்.

ஒரு ஸ்மார்ட் தொலைபேசி app இல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இணைக்கும் வசதியை பாவனையாளருக்கு UPI வழங்கும். கணக்கு இலக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கான தேவையின்றி, பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வசதியளிக்கும்.

இலங்கைக்கும் மொரிஷியசுக்கும் விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு UPI கொடுப்பனவு முறையை பயன்படுத்தும் வசதி இதனூடாக ஏற்படுத்தப்படும்.

வருமானவரித் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகையில், இந்த முறையினூடாக, நபர் ஒருவர் பணத்தை பெற்றுக் கொள்கையில் அல்லது பல மூலங்களிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு வருமானத்தைப் பெறுகையில் வரி அறவிடுவதற்கு உதவியாக அமைந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews