பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கந்தர பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை நீதவான் நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

கந்தர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சாட்சிதாரர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சாட்சிதாரர்களின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினரில், இளைஞர்கள் ஓரிருவர் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இலக்கத்துக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளனர்.

இதன்போது கூரிய ஆயுதங்களுடன் குறித்த பிரதேசத்தில் நின்றிருந்தவர்களை பொலிஸார் கைதுசெய்ய முயன்றபோது, குறித்த தரப்பினர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளதுடன் அவரது கையை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் தலலல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கம்புறப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews