ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு…! இரா.சாணக்கியன்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம் (28) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்கு தெற்கினுடைய அரசாங்கமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழ் வேட்பாளர் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து அவதானித்து வருகின்றன. அது தொடர்பில் தொலைபேசி ஊடாக என்னிடம் பல அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதனை பார்க்கும் போது தெற்கிலே இருக்கும் பேரனிவாத சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதன் ஊடாக அதனை பிரபல்யப்படுத்துவதாக தெரிகிறது.
இதற்கு பின்னணியில் உள்ளவிடயங்களை நாம் பேசியாகவேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்றி தனியே சிங்கள மாக்களது வாக்குகளினால் மட்டு ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்ற நிலை காணப்படும் போது தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளை நிறுத்தி தமிழ் மக்களுடைய விடயங்களை முன்னிறுத்தி அதற்கு ஆணைகோரும் சர்வஜன வாக்கெடுப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதனை நாங்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஒரு முறைதான் செய்யலாம். அதனை ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நியமித்து மக்களிடம் வாக்களிக்குமாறு கோரமுடியாது.
தற்போது கடந்த சில வாரங்களாக இது தொடர்பில் கருத்து தெரிவித்து வருபவர்கள் யாரென்று பார்த்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் தான் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர். எல்லோரும் இணைந்து கோட்டால் தமிழ் பொது வேட்பாளராக போட்டிய தயாராக இருப்பதாக முன்னாள் நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்ததை பார்க்ககூடியதாக இருந்தது.
விக்னேஸ்வரன் ஐயாவினுடைய கடந்த ஒன்றரை வருட கால செயற்பாடுகளை அவதானித்து பார்த்தால் 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டபோது ஆதரவாக வாக்களித்தவர். அதனைத் தொடர்ந்து ஜனாதி நடத்திய சர்வகட்சி மாநாட்டின் போது இவருடைய கையிலும் ஜனாதிபதியுடைய கையிலும் பேசப்படப்போகின்ற விடயம் தொடர்பில் ஒரே ஆவணம் இருந்தது. இது அவர்கள் இருவருக்குமான நெருங்கிய உறவினை வெளிப்படுத்துகிறது. பாராளுமன்ற வாக்கெடுப்புகளின் போதெல்லாம் ஒன்றில் கலந்துகொள்ளாமல் இருந்திருப்பார். இல்லாவிட்டால் ஆதரவாக வாக்களித்திருந்தார். ஒருபோதும் எதிராக வாக்களித்திருக்கவில்லை.
அண்மையில் ஜனாதிபதி அழைத்த கூட்டத்திற்கு, மக்களுடைய கோரிக்கைகள் எதனையும் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் கலந்துகொள்ளப்போவதில்லை என கூறி சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அறிவித்திருந்தார். இதன் மூலம் தான் ஜனாதிபதிக்கு எதிரானவர் என்பதனை மக்களுக்கு காட்டுவதற்கு முற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த பின்னணியில் தான் தமிழ் பொதுவேட்பாளராக அழைத்தால் போட்டியிட தயார் என அவர் கூறியதை பார்க்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் அதில் போட்டியிடுவதற்கு அனுரகுமார திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அவரவர் கூட்டணி சார்பில் போட்டியிடப்போவதாக பகிரங்கமாக கூறியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் மீதமாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐதேக சார்பில் அல்லது பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நிலைதான் காணப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் பெரும்பான்மை இன சிங்கள மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக சொல்ல வேண்டும். அவ்வாறு மகிந்த ராஜபக்சவின் நேரடி ஆதரவுடன் மொட்டு கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லை என்பது உறுதியாக தெரியும். அதேபோன்று இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளும் அவருக்கு கிடைக்கிறது சந்தேகமாகும்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்னொரு வேட்பாளருக்கு போகாமல் தடுக்கும் நோக்கில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் கையிலெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான தமிழ் வாக்குகளை பிரித்தால் பெரும்பான்மை இன சிங்கள வாக்காளர்களது வாக்குகள் மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டு அவர்களுக்காகவே போட்டியிடும் நிலை ஏற்படும். இந்த பின்னணியில் தான் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபொருளாக்கி நாடிபிடித்து பார்க்கும் தந்திரத்தை ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
தமிழ் பொதுவேட்பாளரை துரம்புச்சீட்டாக பயண்படுத்த வேண்டும் என்று நான் கூறிய விடயம் இன்று உள்ள சூழலில் பொருத்தப்பாடில்லாத நிலையே காணப்படுகிறது. இன்று தமிழ் மக்களுடைய வாக்குதான் அடுத்த ஜனாதிபதியாக யார் என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருக்கிறது. இந்த பின்னணியில் இருந்து தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபவர்கள் குறித்து நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களது உள்நோக்கங்களை பார்க்க வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews