அடிப்படைவாத சிவில் அமைப்பு என குறிப்பிடப்பட்ட சிவில் அமைப்பு….!

அடிப்படைவாத சிவில் அமைப்பு என தமிழ் பேரவை அமைப்புக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்க்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதற்க்கு பொலீசாரால் தடை விதிக்குமாறு திருகோணமலை நீதி மன்றை கோரியிருந்தனர் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட உத்தரவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் உள்ளூராட்சி சபையின் அனுமதியின்றி புதிய பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கு எதிராக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் நிஷாந்த குமார செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த முல்லைத்தீவு நீதவான், பொரலுகந்த விகாரைக்கு அருகாமையில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து ஒக்டோபர் முதலாம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

“நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 6ஆம் மைல்கல், இலுப்பைக்குளம் பொரலுகந்த விகாரை அமைந்துள்ள காணிக்கு முன்னால் உள்ள வீதியிலும் அதனைச் சுற்றியும் 01.10.2023 அன்றோ அல்லது அதற்கு அண்மித்த நாளிலோ, நீங்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும், அதற்கு நெருக்கமான திகதியில் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் இதன்மூலம் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”

திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள 8 பேரில் தமிழ் பேரவை அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் அடங்குகின்றனர். நீதிமன்ற உத்தரவில், அந்த அமைப்பு ‘அடிப்படைவாத சிவில் அமைப்பு’ என அழைக்கப்படுகிறது.

செப்டெம்பர் 2ஆம் திகதி மேலதிக நீதவான் தர்ஷனி அண்ணாதுரை பிறப்பித்த உத்தரவில், தமிழ் பேரவை அமைப்பு ‘அடிப்படைவாத சிவில் அமைப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பொரலுகந்த விகாரை நிர்மாணப் பணிகளை மக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஓகஸ்ட் 28ஆம் திகதி திங்கட்கிழமை காலை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக திருகோணமலை கோகன்னபுர பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதோடு, சில பௌத்த தேரர்கள், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை முற்றுகையிட்டு ஆளுநரை அச்சுறுத்தினர்.

இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதியின்றி நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி வழங்க முடியாது தெரிவித்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய திம்பிரிவெவ ரஜமஹா விகாராதிபதி, வடக்கு, கிழக்கு பிரதான சங்கநாயக்கர் பொல்ஹேன்கொட உபரதன தேரர், பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு உள்ளூராட்சி சபையின் அனுமதி தேவையில்லை என தெரிவித்தார்.

“உள்ளே நுழைய அனுமதி கொடுத்ததாகவும், ஆனால் நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை எனவும் கூறினீர்கள். ஆளுநர் அவர்களே, உங்களிடமிருந்து கட்டுமான அனுமதி தேவையில்லை. உள்ளூராட்சி மன்றச் சட்டத்தில் விகாரை கட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெறுமாறு குறிப்பிடப்படவில்லை.
சட்டத்தை கவனமாக படியுங்கள். வணக்க ஸ்தலங்ளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு வரி விலக்கு உண்டு. வரிவிலக்கு பெற்ற பின்னர், அந்த வழிபாட்டுத் தலங்களை நாம் விரும்பியபடி அமைக்க முடியும். அர்ச்சகரின் விருப்பப்படி கோயில் கட்டப்படுகிறது. பிக்குகளின் விருப்பத்திற்கு அமையவே விகாரை அமைக்கப்படும். இவை இரண்டையும் அமைக்க ஆளுநரிடம் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. அனுமதிப் பெற வரப்போவதும் இல்லை. எங்களுக்கு அனுமதி தேவையில்லை. நாங்கள விகாரையை நாங்கள் கட்டியெழுப்புவோம்.”

Recommended For You

About the Author: Editor Elukainews