அரசினதும் பொலிஸாரினதும் அராஜகம் எல்லை தாண்டுகிறது – சுகாஷ் தெரிவிப்பு!(video)

தியாக தீபத்தினுடைய ஊர்திப் பவனியின்போது திருகோணமலையில் காடையர்களை வைத்து தாக்கிவிட்டு எமது உறுப்பினர்கள் தங்களை அச்சுறுத்தியதாக கூறி பொய்யான வழக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த வழக்கில் நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை எடுத்துக்கூறி, அப்பாவிகளான சந்தேகநபர்களை பிணையில் விடுவித்திருக்கின்றோம்
அரச இயந்திரத்தினதும், பொலிஸாரினதும் சர்வதிகாரம் எல்லை தாண்டி சென்றுகொண்டு இருக்கிறது. நீதிபதிகளை நாட்டை விட்டு விரட்டுகின்றார்கள். ஜனநாயக முறையில் போராடுகின்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது பொய்யான வழக்குகளை போட்டு கைது செய்கின்றார்கள்.
இவை அனைத்தும், இந்த நாட்டின் நிர்வாகமானது எந்த விதத்தில் செல்கின்றது என எடுத்துக் காட்டுகிறது என்றால், ஒரு சர்வாதிகார, எதேச்சரதிகாரத்தை நோக்கி இந்த அரசு பயணிக்கிறது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.
நீதிபதிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்ற அரசியல் கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. இது மிலேச்சத்தனத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் வழி வகுக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்கள் இனியும் காலதாமதம் இல்லாமல் உடனடியாக இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews