முன்னணியின் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்…!

செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(14.08.2023) மாலை-05.15 மணிக்கு  யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு அருகில் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் முதலாவதாக நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலித்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கடந்த-2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம்-14 ஆம் திகதி இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சுக்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகளையும், 7 பணியாளர்களையும் நினைவுகூர்ந்து 61 நினைவுச் சுடர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மாணவிகளுக்கும், பணியாளர்களுக்கும் ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மூத்த போராளியும், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளருமான பொன் மாஸ்டர் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன், மூத்த எழுத்தாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மு.ஈழத்தமிழ்மணி, வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இ.முரளிதரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews