பாடசாலைகளில் வருடத்திற்கு ஒரேயொரு பரீட்சை மட்டுமே!

2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பாடத் தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருட இறுதிப் பரீட்சையின் புள்ளிகளுடன் இணைக்கப்படும்.
வருங்காலத்தில், ஒரு தவணைக்கு ஒரு செயல்நூல் என, மூன்று தவணைகளுக்கான செயல்நூல்கள், மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்ட நடைமுறைப்படுத்தலுடன் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப்பதும் வகுப்பறையில் செயல்படுவதும் கட்டாயமாக்கப்படும். எனவே பிரத்தியேக வகுப்பு அல்லது மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் மாணவர்களுக்கு இருக்காது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதனால் பிள்ளைகளை தேவையற்ற போட்டிகளுக்காக தனியார் வகுப்புகளுக்கு அனுப்பி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்யத் தேவையில்லை. தனியார் வகுப்புகளுக்கு செலவு செய்யும் பணத்தைப் பெற்றோர், பிள்ளைகளின் உணவுக்கு செலவு செய்யலாம். இதனால் இலவசக் கல்வியின் நோக்கம் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இம்முறையினால் மாணவர்களின் புத்தகப்பை சுமையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews