இந்திய உள்துறை அமைச்சர் இனப்படுகொலை என்று சொன்னாரா? – ஆய்வாளர் நிலாந்தன்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் வைத்து ஆற்றிய உரையில் இலங்கையில் இடம்பெற்றது மனிதப் பெரும்படுகொலை என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ஒரு பாதயாத்திரையை ஆரம்பித்திருக்கிறார். அதன் தொடக்க நிகழ்வு ராமேஸ்வரத்தில் இடம்பெற்றது.அதில் அமித்ஷா பேசினார்.பேச்சில் ஒருபகுதி பின்வருமாறு..”காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது, தமிழக மீனவர்கள் மீனவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்…”

இதில் அமித்ஷா பயன்படுத்திய வார்த்தை நேரடியாக இனப்படுகொலை என்ற அர்த்தத்தை தருகிறதா என்று விடயம் தெரிந்தவர்களிடம் கேட்டேன்.அவர் “நரசங்கார” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும், அதன் முதல் நிலை அர்த்தம் பாரிய மனிதப் படுகொலை என்றும் விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.எனினும் அதனை இனப்படுகொலை என்று வியாக்கியானம் செய்ய முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதேசமயம் அமைச்சரின் உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேற்படி அண்ணாமலையின் பாதயாத்திரை தொடர்பாக ஒரு காணொளித் வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் ஓரிடத்தில் ஈழத்தமிழர் கண்ணீர்ச்சாபம் என்றும் வீணாய்ப் போகாது” என்ற ஒரு வசனம் உண்டு.அதை தொடர்ந்து “நமக்கு தமிழ் ஈழம் வேண்டும்” என்ற ஒரு சுலோக அட்டை,பாலச்சந்திரனின் முகம் போன்றன காட்டப்படுகின்றன.அக்காணொளியும் காங்கிரஸ்,திமுக கூட்டுக்கு எதிராகத்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இப்பொழுது விடயத்தைத் தொகுத்துப் பார்க்கலாம்.அண்ணாமலை தென்னகத்தில் பாரதிய ஜனதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வருகிறார்.ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் அடுத்த தேர்தலை நோக்கி காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் கூட்டு பலமானது என்று நம்பப்படுகிறது.இக்கூட்டின் வெற்றி வாய்ப்புகளை குறைப்பதற்காக ஈழத்தமிழர்கள் விவகாரத்தையும் பாரதிய ஜனதா கையில் எடுத்திருக்கிறது.ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸும் திமுகவும் காரணம் என்று பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்கின்றது.பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அமித்ஷா இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

அமித்ஷா ஓர் உள்துறை அமைச்சர்.உள்துறை அமைச்சு எனப்படுவது இந்தியாவைப் பொறுத்தவரையிலும் பிரதமருக்கு அடுத்தபடியான பதவி. அவ்வாறான பொறுப்பில் இருக்கும் ஒருவர்,குறிப்பாக பாரதிய ஜனதாவின் பெருந் தலைவர்களில் ஒருவர்,அவ்வாறு இனப்படுகொலை என்று தமிழில் ருவிற் செய்கிறார்.அதை எப்படிப் பார்ப்பது?

உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக வெளியுறவு சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை பொறுப்பின்றிக் கையாள முடியாது.இலங்கைத்தீவில் இடம் பெற்றது பெரிய மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்று இந்திய உள்துறை அமைச்சர் கூறுகிறார்.அது நிச்சயமாக இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகத் தெரியவில்லை.இந்தியா மட்டுமல்ல இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இலங்கைக்கு அச்சுறுத்தலான தீர்மானங்களை நிறைவேற்றிய கனடாகூட இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதனை அதன் உத்தியோகபூர்வ அரச நிலைப்பாடாக இதுவரை அறிவித்திருக்கவில்லை. உலகில் எந்த ஒரு நாடும் அறிவித்திருக்கவில்லை.இதில் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஈழத் தமிழர்கள் பெருமெடுப்பில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயத்தை வெளிப்படையாக உத்தியோபூர்வமாக கூறுவதற்கு அநேகமாக தவிர்த்து வந்தது.அமித்ஷா இப்பொழுது அதை”நரசங்கார்- Narasanhaar “என்று கூறுகிறார்.

1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் திகதி திருமதி இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார்.1983 ஜூலைப் படுகொலைகளை எதிர்த்து ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.அன்றைய தினம் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றினார்…”இலங்கைத் தீவில் நடப்பது என்ன?அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை”.

ஒரு இந்திய தலைவர் அவ்வாறு குறிப்பிட்டமை அதுதான் முதல் தடவை. அதற்குப் பின் எந்த ஒரு இந்தியத் தலைவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. இந்திரா காந்தி அவ்வாறு கூறிச் சரியாக 40 ஆண்டுகளின்பின் இந்திய உள்துறை அமைச்சர் இப்பொழுது அதை இனப்படுகொலை என்ற பொருள்பட வர்ணித்துள்ளார்.

ஆனால் அதை அவர் ஒர் அரசியல் நிலைப்பாடாகக் கூறவில்லை என்று ஓர் இந்திய ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.தமிழகத்தில் திமுக,காங்கிரஸ் கூட்டைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தின் ஒரு பகுதியே அதுவென்று அவர் வர்ணித்தார்.தமிழக அரசியலில் ஈழத்தமிழர் விவகாரம் எனப்படுவது ஈழத்தமிழ்நோக்கு நிலையில் இருந்து கையாளப்படுவதை விடவும் தமிழகத்தின் தேர்தல் அரசியல் நோக்கு நிலையில் இருந்துதான் கையாளப்பட்டு வருகிறது என்பது ஈழத் தமிழர்களின் துயரங்களில் ஒன்று.அண்ணாமலையின் வருகைக்குப்பின் பாரதிய ஜனதா தமிழகத்தில் எழுச்சியைக் காட்டுகின்றது. அதேசமயம் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையிலான கூட்டு பலமானது; வெற்றி வாய்ப்புக்களைக் கொண்டது என்றும் நம்பப்படுகிறது.அதனால்தான் அந்தப் பலத்தை உடைக்கும் நோக்கத்தோடு ஈழத்தமிழர்களின் விடயத்தில் தவறிழைத்தது இந்த இரண்டு கட்சிகளின் கூட்டுத்தான் என்று அமித்ஷா கூறுகிறார்.

குறிப்பாக அமித் ஷா அவ்வாறு கூறிய இடம் கூறிய காலம் எது என்பதை இந்திய -இலங்கை உறவுகளின் பின்னணியில் வைத்தும் பார்க்கவேண்டும். அண்மையில் ரணில் விக்கிரமசிங்க டெல்லிக்கு சென்றிருந்தார்.அங்கே அவர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு தரை வழிப் பாலத்தை கட்டுவது தொடர்பான முன்மொழிவை கொடுத்திருந்தார்.அந்த முன்மொழிவை அவர் ஏற்கனவே 2004ஆம் ஆண்டும் முன்வைத்திருந்தார்.அப்பொழுது அவர் பலவீனமான பிரதமர்.அப்பொழுது திருமதி சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தார்.அந்த ஆட்சியை விமர்சகர்கள் இரட்டை ஆட்சி என்று வர்ணித்தார்கள். சந்திரிகா ஒரு பக்கம் இழுக்க ரணில் இன்னொரு பக்கம் இழுத்தார்.

அதன்பின் 2015ல் ரணில் ஆட்சிக்கு வந்ததும் இந்திய வீதிப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பாலம் கட்டும் யோசனையைப் புதுப்பித்தார். அப்பொழுதும் ரணில் பலமான தலைவர் அல்ல.அவர் பலவீனமான ஒரு பிரதமராக இருந்தார்.ஜனாதிபதியாக மைத்திரி இருந்தார்.அங்கேயும் இருவருக்கும் இடையே இழுபறி இருந்தது.அதனால் நிதின் கட்கரியின் யோசனையின் தொடர்ச்சியாக உரையாட ரணில் தயாராக இருக்கவில்லை.

ஆனால் ரணில் அந்த யோசனையை முன்வைத்து 11 ஆண்டுகளின் பின் நிதின் கட்கரி அந்த யோசனையை மீண்டும் புதுப்பித்தமை என்பதில் இந்தியாவின் வெளியுறவு இலக்குகள் இருந்தன. ரணில் பலவீனமானவரோ இல்லையோ அவர் ஒரு தலைவர்.அவர் முன்வைக்கும் யோசனையை இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்வதன்மூலம் இந்தியா அந்த விடயத்தை சீரியஸாகக் கையாள முற்பட்டது. ஆனால் அப்பொழுது ரணில் பலவீனமான ஒரு பிரதமராக இருந்தார்.

இப்பொழுது மீண்டும் 19 ஆண்டுகளின் பின் அதே யோசனையை ரணில் முன் வைத்திருக்கிறார்.ஆனால் இப்பொழுதும் அவர் பலவீனமான, அதாவது மக்கள் ஆணை இல்லாத ஒரு ஜனாதிபதிதான்.தாமரை மொட்டுக்களின் தயவில் தங்கியிருப்பவர்.அதாவது அப்பாலத்தை கட்டும் முன்மொழிவுகளை ரணில் முன்வைக்கும் போதெல்லாம் அவர் பலவீனமான ஒரு தலைவராகவே இருக்கிறார்.ஆனால் அவர் பலவீனமானவரா பலமானவரா என்பதல்ல இங்கு பிரச்சனை.அவர் ஓர் அரசுத் தலைவர்.மற்றொரு அரசுத் தலைவருக்கு அவர் வழங்கிய வாக்குறுதி அது.எனவே இந்தியா அந்த வாக்குறுதியை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றுதான் சிந்திக்கும்.

அப்படி ஒரு பாலத்தை ரணில் மட்டுமல்ல எந்த ஒரு சிங்களத் தலைவருமே கட்டத் துணியமாட்டார்கள் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சுமுகமான உறவு உள்ளவரை,அப்படி ஒரு பாலம் கட்டப்படுவதற்கு எந்த ஒரு இலங்கை தலைவரும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டால் இலங்கை இந்தியாவின் மாநிலம் ஆகிவிடும் என்றுதான் சிங்கள மக்கள் சிந்திப்பார்கள்.எனவே அது விடயத்தில் எந்த ஒரு சிங்களத் தலைவரும் ரிஸ்க் எடுக்கத் துணிய மாட்டார்.

எனினும்,ரணில் திரும்பத் திரும்ப அது தொடர்பான வாக்குறுதிகளை இந்தியாவுக்கு வழங்குகிறார். ஏன்? ஏனென்றால் இந்தியாவை வசப்படுத்த அது உதவும் என்று அவர் நம்புகின்றார்.அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவைத் தன் பக்கம் வைத்துக்கொள்ள அது உதவும் என்றும் நம்புகிறார்.சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறிய இச்சிறிய தீவை இந்தியாவுடன் இணைக்கத் தயார் என்று கூறுவதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களைப் போக்கலாம் என்றும் அவர் நம்புகின்றார்.

இதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லலாம்.நாய்கள் சண்டை போடும் பொழுது தோற்றுப்போன நாய் என்ன செய்யும் தெரியுமா?நான்கு கால்களையும் வானத்தை நோக்கி உயர்த்தியபடி தன் வயிற்றுப்பகுதியைக் காட்டியபடி மல்லாக்கக் கிடக்கும். அது ஒரு முழுச்சரணடைவு.நாயின் உறுப்புகளில் மிகப் பலவீனமானது அடி வயிற்றுப் பகுதி. அந்த மென்மையான அடிவயிற்று பகுதியை எதிரியிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டு நான் மோதலுக்கு தயார் இல்லை;எனது பலவீனத்தை நீ தாக்கலாம் என்று சரணடைவது.ரணில் அத்தற்காப்பு உத்தியை  நினைவுபடுத்துகிறார்.திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களை இந்தியா பாவிப்பதற்கு அனுமதித்ததும் அவர்தான்.இந்திய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதித்ததும் அவர்தான்.இப்பொழுது சீன நிறுவனங்களுக்கும் அவர் அவ்வாறு அனுமதியை வழங்கியுள்ளார்.

அவர் டெல்லியில் வைத்து பாலம் கட்டத் தயார் என்று கூறிய பின்னர் தயான்  ஜெயதிலக போன்ற சிலரைத்தவிர பெரும்பாலான சிங்களக் கட்சிகள் அது தொடர்பாக பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டவில்லை.ஏனெனில், எல்லாருக்குமே தெரியும் ரணில் ஒப்புக்கொண்ட பாலத்தை மனதால்தான் கட்ட முடியும் என்று.63 நாயன்மார்களில் ஒருவராகிய பூசலார் கட்டிய மனக்கோவிலைப் போன்றதே  அதுவும்.அப்பாலம் ஒர் அரசியல் பௌதீக யதார்த்தமாக மாறக்கூடிய  பிராந்தியச்சூழல் இப்பொழுது இல்லை.கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையே நல்லுறவு உள்ளவரை அது சாத்தியமில்லை.

ஆனால் ஓர் அரசுத் தலைவர் என்ற அடிப்படையில் ரணில் சொன்னது இந்தியாவுக்கு ஒரு பிடி.அதை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்றுதான் இந்தியா சிந்திக்கும். இவ்வாறான ஒரு புவிசார் அரசியல் சூழலில்தான் இந்திய உள்துறை அமைச்சர் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.இந்தியாவின் மிகப்பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் அவ்வாறு கூறியதை வெறுமனே தேர்தல் நோக்கிலானது என்று எடுத்துக் கொள்வதா? அல்லது அதற்குள் ஏதும் ராஜதந்திர பரிபாசைகள் உண்டு என்று எடுத்துக் கொள்வதா?

Recommended For You

About the Author: Editor Elukainews