கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை….! அரசியல் ஆய்வாளர் சட்டசரணிசி.அ.ஜோதிலிங்கம்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கூடவே முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கஜேந்திரகுமார் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அவர் விசாரணைக்கு எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. பாராளுமன்றக்கூட்டம் முடிந்தவுடன் பொலிஸ் நிலையம் வந்து விசாரணைக்கு முகம் கொடுப்பதாகக் கூறியிருந்தார். எனினும் பொலிஸார் பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றிருந்தனர். பொலீசாருக்கு அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

இந்தக் கைது விவகாரம் பலத்த வாதப் பிரதி வாதங்களை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு பாராளுமன்ற சிறப்புரிமைகள் இருக்கின்றது. அந்த சிறப்புரிமை மீறப்பட்டிருக்கின்றது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு மறுப்பேதும் தெரிவிக்காத நிலையில் பாராளுமன்ற நிகழ்வில் பங்கேற்பதற்கு பொலிசார் வழிவிட்டிருக்க வேண்டும். பாராளுமன்ற நிகழ்வு முடிந்த பின்னரும் அவர் விசாரணைக்கு சமூகமளிக்காவிட்டால் கைது செய்திருக்கலாம்.

இக்கைதுக்கான எதிர்வினை பாராளுமன்றத்திலும் வெளியிலும் கடுமையாகவே இருந்திருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாசா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். வேறும் பல எதிர்க்கட்சித்தலைவர்களும் கண்டணங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தரப்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் யாழ் மாவட்டப்பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றனர். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணனும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வெளியே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்னும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தமிழ்ப்பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியிருக்கிறார்.

இக் கைதினை எதிர்த்து கனடாவிலுள்ள இலங்கைத்தூதுவராலயத்தின் முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். அங்கு முன் கதவு இரும்புக் கதவால் பூட்டப்பட்டு பின் கதவு வாசல்க;டாகவே அலுவல்கள் நடந்தன. கைதியாக உள்ள நிலை நீண்டிருப்பின் ஏனைய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கும். பிரித்தானியா , சுவிஸ்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆர்ப்பாட்டத்திற்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. தமிழ் நாட்டிலும் முயற்சிகள் நடந்தன. அவர் விடுதலை செய்யப்பட்டடிருப்பதால் தற்காலிகமாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால்  முன்னணியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாயில் கறுப்புத்துணியைக்கட்டி மௌனப்போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அவர் விடுதலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இங்கும் போராட்டங்கள் வெடித்திருக்கும். இது குறுகிய நாட்களிலேயே உலகலாவிய போராட்டமாக வளர்ந்திருக்கும்.

கஜேந்திரகுமார் தொடர்பாகவோ தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்பாகவோ பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். இந்தக்கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை. தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவிலுடையில் வந்த பொலிசாhரால் தாக்கப்பட்டிருக்கின்றார். அவரது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருக்கின்றது. இங்கு அவமானப்பட்டது கஜேந்திரகுமார் அல்ல. மாறாக தமிழ் மக்களே!

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதற்கென ஒரு சுய மரியாதை இருக்கின்றது. இந்த சுய மரியாதை மக்கள் பிரதிநிதிகளினாலேயே வெளிப்படுத்தப்படுகின்றது. இந்தச் சுயமரியாதை இங்கு சிதைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் கட்சி பேதம் பாராட்டாமல் அனைத்துத் தமிழ் சக்திகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று தாக்குதல் சம்பவம். இரண்டாவது சிறப்புரிமை மீறல். புலனாய்வு பிரிவினருக்கு தமது கடமைகளை மேற்கொள்ள அதிகாரம் இருக்கின்ற போதும் தன்னுடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவரது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பு இங்கு உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. கஜேந்திரகுமாரின் தந்தையார் படையினராலேயே கொல்லப்பட்டார் என நியாயமான சந்தேகம் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட படையினரின் பெயர்களும் அரசிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. தவிர குடாநாட்டில் வாள்வெட்டுக் கலாச்சாரமும் இருக்கின்றது.
எனவே புலனாய்வு பிரிவினரை அடையாளம் காட்டுமாறு கேட்பதற்கு ஒரு மக்கள் பிரதிநிதியான கஜேந்திரகுமாருக்கு முழு உரிமையும் உண்டு. அதுவும் பொலீஸ் பாதுகாப்பு இல்லாத ஒருவருக்கு அந்த உரிமை அதிகம் இருக்கிறது எனக் கூறலாம். புலனாய்வுப் பிரிவினர் தம்மை அடையாளம் காட்டாததோடு தாக்குதலையும் நடாத்தியிருக்கின்றனர். இது விடயத்தில் பொலிசாரின் முதல் கடமை சம்பந்தப்பட்ட புலனாய்வு பிரிவினரை விசாரணை செய்வதாகும். அதை விடுத்து அவர்கள் கஜேந்திரகுமாரையும் முன்னணி உறுப்பினர்களையும் கைது செய்வதற்கு முயற்சித்திருக்கின்றனர். இங்கு பொலிசாரின் ஒழுக்க விழுமியங்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதோடு அடாவடித்தனமும் நிகழ்ந்திருக்கின்றது.
இரண்டாவது சிறப்புரிமை மீறல் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தங்களின் நிலைநின்று பாராளுமன்றத்தை கையாள்வதற்கேயாகும்.
கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்ட தினம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்தி வைப்பு விவாதம் நடந்தது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவ் விவாதத்தில் அவர் கலந்து கொள்வது அவசியமானது. தமிழ்ப்பிரதேசங்களில் சிறு கைத்தொழில் நடுத்தர கைத்தொழில் என்பன கடுமையாக பலவீனமடைந்திருக்கின்றன அதைப்பற்றியெல்லாம் பேசுவதிலிருந்து அவர் தடுக்கப்பட்டிருக்கின்றார். அவருக்காக விவாதம் திரும்ப இடம்பெறப்போவதில்லை இங்கு தமிழ் மக்களின் சுயமரியாதை மட்டுமல்ல உரிமையும் மீறப்பட்டிருக்கின்றது.

கஜேந்திரகுமாரின் கைதுக்கு மருதங்கேணி விவகாரம் முக்கிய காரணம்; எனக்கூற முடியாது. அவரையும் அவரது உறுப்பினர்களையும் அச்சுறுத்தி தையிட்டி போராட்டத்தை தடுப்பதே முக்கிய காரணமாகும். தையிட்டி போராட்டம் இன அழிப்புக்கு விகாரைகளை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அதனை அணையவிடாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்க முனைகின்றனர். போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் கஜேந்திரகுமார் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. அண்மைய காலத்தில் அவரும் பங்கேற்று வருகின்றார். அவர் பங்கேற்கத் தொடங்கியவுடன் போராட்டத்திற்கு ஒரு சர்வதேசப் பரிணாமமும் வந்திருக்கின்றது.
தையிட்டி போராட்டத்தினால் கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாதிருக்கலாம். ஆனால்இப்போராட்டம் இனி மேல் விகாரை கட்டப்படுவதையாவது தடுக்கக் கூடியதாக இருக்கும். மக்கள் போராட்டம் வலுவடைந்தால் தற்போதுள்ள விகாரைகளுக்கு நெருக்கடி வரும் எனக் கருதி அந்த விகாரைகளின் பிக்குமார் சற்று அடக்கி வாசிக்க முற்படுவர். நயினாதீவு விகாராதிபதிக்கு அந்த அச்சம் வந்திருக்கின்றது. மக்களின் சம்மதமில்லாமல் நீண்ட காலத்திற்கு ஒரு வணக்கஸ்தலத்தை பாதுகாக்க முடியாது. படையினரின் பாதுகாப்பு எல்லாக்காலங்களுக்கும் கை கொடுக்கப் போவதில்லை. வணக்கஸ்தலங்கள் மக்களுக்கானதே தவிர மக்களை ஒடுக்குவதற்கானதல்ல .
இரண்டாவது இன அழிப்பு ஒன்று திட்டமிட்டு நடைபெறுகின்றது என்பதை சர்வதேச ரீதியாக பேசு பொருளாக்க இந்தப்போராட்டங்கள் உதவக்கூடியதாக இருக்கும். இன்று தையிட்டி விவகாரத்தை முன்னணினர் சர்வதேச மயப்படுத்தியுள்ளனர். வடக்கிற்கு வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள் தையிட்டி விவகாரத்தைப் பற்றிப் பேசாமல் செல்வதில்லை.

இங்கே முன்னணியினர் ஏனைய கட்சிகளிலிருந்து வேறுபடுவது ரிஸ்க் எடுக்கும் அரசியலுக்கு தயார் நிiயில் இருப்பது தான். தமிழ் மக்களின் அரசியல் போராட்ட அரசியல் தான். இனப்பிரச்சினை தீரும் வரை சுகபோக அரசியலுக்கு இங்கு இடமில்லை. முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் “ரிஸ்க்” அரசியலுக்குத் தயாராக வேண்டும்.

இக்கைது விவகாரத்தில் கஜேந்திரகுமார் இறுதியான நபரல்ல. இது மேலும் தொடர்வதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. எனவே தமிழ்த்தரப்பு இதற்கு முகம் கொடுக்க தயாராக வேண்டும். ஒருங்கிணைந்த செயற்பாடு இல்லாமல் இதற்கு ஒரு போதும் முகம் கொடுக்க முடியாது. காந்தி கைது செய்யப்படும் போது இந்தியாவே அதிரத்தொடங்கும். அதே போல தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போது தமிழ் உலகம் முழுவதும் அதிர வேண்டும். இந்த அதிர்வின் மூலம் தான் தமிழ் மக்கள் தங்களது வலிமையை உலகலாவிய வகையில் காட்ட முடியும்.

இன்றைய நிலையில் முக்கியமானது ஒருங்கிணைந்த அரசியலை எவ்வாறு கொண்டு வருவது என்பது தான். தற்போதைய நிலையில் விவகாரங்களின் அடிப்படையில் ஒருங்கிணைவை கொண்டு வரலாமா? என்பது பற்றி யோசிப்பது நல்லது. அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலுக்கும் கட்சி அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால் ஒருங்கிணைவு அரசியலை செய்யப்போவதில்லை. சிவில் தரப்பிலிருந்து தான் அதற்கான முயற்சிகள் இடம்பெற வேண்டும். முன்னணி தையிட்டியில் போராட்டத்தினை நடாத்தினால் ஏனையவர்கள் கச்சேரிக்கு முன்னாலோ அல்லது குருந்தூர் மலையிலோ போராட்டத்தை நடாத்த ஊக்குவிக்க வேண்டும். முன்னணியினர் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடாத்த முன்வருகின்றார்கள் இல்லை என குறைகூறிக்கொண்டிருக்க முடியாது. சிவில் அமைப்புக்கள் இப்போராட்டங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.
இன்னோர் பக்கத்தில் சிவில் அமைப்புக்களை போராட்டங்களை ஒழுங்கு செய்தால் அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்களை இணைப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும். அண்மையில் இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அனைத்து தரப்பினரும் பங்குபற்றியிருந்தனர். இதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏன் எம்மால் முன்னேற முடியாது.

தேசம் என்பது மக்கள்திரள் தான். மக்களைத்திரளாக்காமல் போராட்டங்களில் ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது. ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் மக்களைத் திரளாக்கவும் முடியாது. தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனம் தாயகத்தமிழர்களை மட்டும் ஒன்று திரட்டினால் கூட முன்னேறுவதில் எங்களுக்கு தடங்கல்கள் உண்டு. உலகத்தமிழர்கள் உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் என்போரை எங்களுக்கு பின்னால் அணி திரட்ட வேண்டும். தற்போது சிங்கள தேசம் அனைத்து வகைகளிலும் பெரிதாகவும் தமிழ்த்தேசம் சிறிதாகவும் உள்ளது. தமிழ்த்தேசம் சிறிதாக இருக்கும் வரை பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள முடியாது. சிங்கள தேசத்தை விட தமிழ்த்தேசத்தை பெரிதாக்க வேண்டும். உலகத்தமிழர்களும் , உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அதற்கான வாய்ப்புக்களைத்தருவார்கள் . எண்ணிக்கையில் மட்டும் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது பொருளாதாரம், கல்வி, இராஜதந்திரம என்பவற்றிலும் பெரிதாக வேண்டும்.
இதற்கெல்லாம் அடிப்படை நிபந்தனை தாயகத்தில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயற்படுவது தான்.  தாயகத்தில் ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் உலகத்தமிழர்களையோ , உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளையோ , ஒருங்கிணைவு அரசியலுக்குள் கொண்டு வர முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ ஆயுதப்போராட்டம் பலரை போராட்டக்களத்திற்கு வெளியே தள்ளியிருந்தது. அந்த நிலைமையை தொடர அனுமதிக்க முடியாது.

கஜேந்திரகுமாரின் கொள்கை உறுதிப்பாடு தொடர்பாக சந்தேகங்கள் எதுவும் கிடையாது. ஆனால் அவரிடம் மூன்று குறைபாடுகள் உண்டு. ஒன்று அவர் ஒருங்கிணைவு அரசியலுக்கு ஒரு போதும் தயாராக இருப்பதில்லை. இரண்டாவது அரசியல் மூலோபாயத்தை மட்டும் கொண்டதல்ல. தந்திரோபாயத்தையும் கொண்டது. கஜேந்திரகுமாரிடம் தந்திரோபாய அரசியல் மருந்திற்கு கூட கிடையாது. மூன்றாவது எல்லா விவகாரங்களிலும் கட்சி அரசியலையே அவர் முதன்மைப்படுத்த முனைகிறார்.  தேச அரசியல் என வந்து விட்டால் கட்சி அரசியலை சற்று அடக்கி வாசிக்க தயாராக இருக்க வேண்டும்.
இளம் அரசியல்வாதி என்ற வகையில் கஜேந்திரகுமார் இந்த விமர்சனங்களை பரிசீலனைக்கு எடுப்பார் என நம்புவோம்

Recommended For You

About the Author: Editor Elukainews