தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் ஐ.நா அலுவலகத்துக்கு அனுப்பவில்லை!

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்

ஆனால், தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும்  விசாரிக்க கோரி சம்பந்தனால்   ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.

இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என  அவ்வாறான ஒரு சம்பவமும்  இடம் பெறாது.

இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.

அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம் அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன்  நல்ல உறவாக உள்ளார்கள். அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள்

நாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் , கூட்டாகச் செயற்படும் போது பல பிரச்சனைகள், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால், தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews