அமெரிக்க செனற்றின் அறிக்கையும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் இனமுரண்பாடானது பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் தளத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் இனமுரண்பாட்டுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் உலகளாவிய அனுபவங்களும் சர்வதேச சட்டங்களும் அமைந்திருப்பதுடன் உள்நாட்டில் பொறிமுறையிடமிருநது தீர்வு சாத்தியமாகாது என்பதையும் புரிந்து கொண்டதன் விளைவும் அடிப்படைக் காரணமாக தெரிகிறது. அதாவது உலகளாவிய வல்லரசுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிராந்திய நாடான இந்தியா இனப்பிரச்சினைக்கான தீர்வினை அல்லது தீர்வினை நோக்கிய அழுத்தத்தினை ஏற்படுத்துவன என்ற எண்ணம் ஈழத்தமிழரிடம் காணப்படுகிறது. அதனை ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்கள் ஊக்குவிப்பதாகவும் தெரிகிறது. இலங்கைத்தீவு மீதான நலனை கொண்ட வல்லரசுகளும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவது போன்று அறிக்கையிடுவதனையும் அதனை கருத்தியல் தளத்தில் முதன்மைப்படுத்தும் ஆய்வாளர்களையும் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. இக்கட்டுரையானது சமகாலத்தில் அமெரிக்க-தென் இலங்கை-ஈழத்தமிழரது உறவிலுள்ள நகர்வுகளைத் தேடுவதாக உள்ளது.

முதலாவது, உலகில் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களே உதவின என்பது எங்களுக்கு தெரியும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலிசப்ரி 05.03.2023 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிடுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நீண்டகாலமாக தொடரும் நடவடிக்கையாகும். இதில் அமெரிக்கா மாத்திரமல்ல இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன. அந்நாடுகளது போர்க்கலங்கள் வருவதும் கூட்டு ஒத்திகை நிகழ்வதும் வழமையான செயல்முறையாகவே உள்ளது. எல்லைகளை கடந்து இலங்கை தனது சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயல்பட்டிருக்காவிட்டால் இலங்கையால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. இவ்வாறான செயல்பாட்டினால் விடுதலைப்புலிகளின் ஆயுதவினியோகத்தை முடக்க முடிந்தது. அவர்களின் நிதிதிரட்டும் நடவடிக்கையை முடக்கினோம். சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளை தடைசெய்தோம் எனக்குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் மேலும் முக்கிய விடயம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது விடுதலைப் புலிகளின் ஒன்பது (9) ஆயுதக்கப்பல்களை இலங்கைக் கடற்படை அழித்தது. இது இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் அமெரிக்கப் புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது எனவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது பற்றி 2013 களில் முன்னாள் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ அவுஸ்ரேலிய ஊடகமொன்றுக்கு தெரிவிக்கும் போது விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் 2008-2009 வரையான காலப்பகுதியில் அழிப்பதற்கு அமெரிக்காவின் சற்றலையிட் தொழிநுட்பத்தின் மூலமான உளவுத் தகவல்கள் மிக மிக உதவியாக அமைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். அவரது வெளிப்படுத்துகையில் 12 ஆயுதக் கப்பல்கள் எனவும் அதில் ஆடலரிகள் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் இலங்கை இராணுவத்தின் கையிருப்புக்கு சமமான அளவில் கொண்டுவரப்பட்டதெனவும் அவற்றில் அனேகமானவை வடகொரியாவின் தயாரிப்புக்கள் எனவும் அவை கிழக்காசிய திறந்த சந்தையில் கொள்வனவு செய்யப்பட்டதெனவும் தெரிவித்திருந்தார்.அது மட்டுமன்றி அத்தகைய ஆயுதக்கப்பல்களது அமைவிடத்திதையும் நகர்வையும் அமெரிக்காவே புலனாய்வுத் துறைக்கு தெரியப்படுத்தியதெனவும் குறிப்பிட்டார். இதனைவிட விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை டியாகோகாசியாவிலுள்ள அமெரிக்கத் இராணுவத் தளத்திலிருந்தே ஏவப்பட்ட ஏவுகணைகளாலே அழிக்கப்பட்டதாகவும் அதற்கான தகவல் உண்டு. விடுதலைப் புலிகளின் வடகொரிய ஆயுதக் கொள்வனவுக்கும் சீனாவுக்கு தொடர்புள்ளதாகவும் அதனை சீனா இலங்கை புலனாய்வுத் துறைக்க தெரியப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய 200-300 மில்லியன் அமெ.டொ. நிகரான ஆயுததளபாடங்கள் விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்திருந்ததாகவும் புலம்பெயர்தளத்திலிருந்து அத்தகைய நிதி திரட்டப்படட்டதாகவும் தெரியவருகிறது.

இரண்டாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு அமெரிக்க செனற்சபையின் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பான குழு அறிவித்துள்ளது. அதன் பொப் மெனின்டிஸ் குறிப்பிடும் போது தேர்தலை தாமதிப்பது ஜனநாயக விரோத செயலாகவே கருதப்படும். மக்களின் குரலை பாதிக்கும் நடவடிக்கையானது அவர்களது உரிமைக்கு எதிரான வன்முறையாகவே கொள்ளப்படும் என தனது டூவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு செனற் வலியுறுத்தியதுடன் இந்தியாவும் அத்தகைய நகர்வுகளுக்கான உரையாடலை வெளிப்படுத்த முயன்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் தமது ஒத்துழைப்பினை பலப்படுத்துவதுடன் இலங்கையின் பாதுகாப்பு நிலமையை தமக்கு சாதகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவே தெரிகிறது. இதற்கு அமைவாக இந்தியா 4 பில்லியன் அமெ.டொலரினையும் அமெரிக்கா 3.4 பில்லியன் அமெ.டொ. இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் வழங்கியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதனைவிட இரு நாடுகளும் நன்கொடைகளை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் வழங்கியுள்ளன. இருந்த போதும் இலங்கைக்குள் அடிமட்டத்தில் அரசியல் பொருளாதார, மற்றும் சமூக விடயங்களை உருவாக்குவதில் அமெரிக்க செனற்றுக்கு உள்ள அக்கறையைப் பற்றிய புரிதல் அவசியமானதாக உள்ளது. அதிலும் தமிழ் மக்களுக்கு அமெரிக்காவின் நகர்வுகளை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமானதாகவுள்ளது.

ஒன்று, தென் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை முன்வைப்பதில் சர்வதேச நாணய நிதியம் அதிகம் முயற்சிக்கின்றபோது சீனாவின் கடன் பற்றிய நகர்வுகள் சமதூரத்தில் நிகழ்ந்து கொண்டிருகிறது. அத்தகைய நகர்வுகளுக்குள் தென் இலங்கை நகராது கட்டுப்படுத்தும் நோக்கில் செனற்றின் அறிக்கை அமைந்திருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இத்தகைய அறிக்கையூடாக தென் இலங்கை இந்தோ-பசுபிக்குக்குள் கட்டுபட்படவும் அமெரிக்க நலன்களுக்கு விரோதமாக நகராது இருக்கவும் செனற் திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. அமெரிக்க ஜனநாகத்தை அமெரிக்கவாழ் கறுப்பரிடமிருந்தே விளங்கிக் கொள்ள முடியும். உலகளாவிய தளத்தில் அமெரிக்க ஜனநாயகத்’தின் போலியை விளங்கிக் கொள்வது கடினமானதல்ல.

இரண்டு, உள்ளூராட்சித் தேர்தலினை உரிய காலத்தில் வைப்பதன் மூலம் அமெரிக்காவின் நலனுக்கான நகர்வுகள் சாத்தியமானதாக அமைய வாய்ப்பு அதிகமாகவே தென்படுகிறது. அதாவது மீளவும் வெதமுல்ல அரசியல் எழுச்சி பெறாது தடுக்கப்பட வேண்டுமாயின் அவர்களது இருப்பு முற்றாகவே தென் இலங்கை அரசியலிலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் தற்போது வைத்துள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமல்ல உள்ளூராட்சி தேர்தல் மூலம் அவர்களது வாக்குப் பலம் அம்பலப்படுத்துவதுடன் வெதமுல்லையின் பாராளுமன்ற பலத்தையும் ஆட்டங்காணவைக்க முடியுமென செனற் கருதுகிறது. அதாவது உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் மூலம் பாராளுமன்றத்தை கலைக்கவோ அல்லது மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கவோ முடியுமென அமெரிக்க கருதுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் வெதமுல்ல அரசியல் எழுச்சியடையக்கூடாது என்பதே அமெரிக்க செனற்றின் நோக்கமாகும். ஜனாதிபதி இத்தேர்தலை நடாத்த முடியாத சூழலுக்கும் வெதமுல்ல ஆளும் தரப்பே பிரதான காரணமாக உள்ளது. அவ்வாறான ஒரு தேர்தலுக்கள் மொட்டின் எதிர்கதாலம் காணாமல் போய்விடும் என்பதே தற்போதுள்ள குழப்பமாகும். அதனால் தேர்தலை நடாத்தக் கூடாது என்பதில் பிடிவாதமாக வெதமுல்ல அரசியல் செயல்படுகிறது. ஏறக்குறைய அமெரிக்காவாலும் வெதமுல்லை அரசியலின் நலன்களாலும் இழுபறிக்குள்ளாகும் நிலைக்குள்ளேயே ஜனாதிபதியின் இருப்பு அமைந்துள்ளது.

மூன்று, சீனாவுக்கு எதிரான ஆட்சியாளர்களால் இலங்கைத் தீவு கட்டப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறையுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை சீனாவின் பிடிக்குள்ளிலிருந்து மீட்டெடுப்பதே செனற்றின் வெளியுறவுக்குழுவின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்து சமுத்திரத்தின் இருப்பு இலங்கைத் தீவை அதிகம் மையப்படுத்தியிருட்பபதனால் அமெரிக்க நலனுக்கு மட்டுமல்ல உலக வல்லரசுகளது நலனுக்குள் இலங்கைத்தீவு காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியம் சீனாவுக்கும் இலங்கைத்தீவு பொறுத்து உண்டு. இதனால் எவ்வளவுக்கு இலங்கைத்தீவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமோ அவ்வளவுக்கு இந்துசமுத்திரம் அந்த நாட்டின் நலன் பாதுகாக்கப்படும்.

எனவே இலங்கை மீதுள்ள அமெரிக்க கரிசனையானது நலன்சார்ந்த அரசியலாகவே உள்ளது. அதனை ஈழத்தமிழர்களும் அதன் அரசியல் செயல்பாட்டாளர்களும் புரிந்து கொள்வது அவசியமானது. வெளிப்படையாக உலகிலுள்ள அனைத்து வல்லரசு நாடுகளும் ஏதோவொரு நலனடிப்படையில் இயங்குவதென்பது அரசியல் நியமமாகும். ஆனால் அதற்குள் எந்த தேசியங்களும் முழுமையாக தங்கியிருக்காதது மட்டுமன்றி உரிய வாய்ப்புக்களையும் சந்தர்பங்களையும் பயன்படுத்தத் தவறுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இந்தியாவை, சீனாவை, அமெரிக்காவை உதாசீனம் செய்யாது அதே நேரம் அடிமையாக செயல்படாத அரசியல் போக்கொன்று அவசியமானது. அதற்கான கட்டமைப்பு செயல்பாடும் ஈழத்தமிழருக்கு அவசியமானது. இதுவே தற்போதுள்ள நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தேசியங்களது இருப்புக்கான உத்தியாகும். ஈழத்தழிழர் அதற்கான எந்தகைய உத்தியையும் கொண்டிருக்காத நிலை நீடிப்பதானது அபாயமானது. உலகிலுள்ள தேசியங்கள் தமது நலனைக்கட்டமைப்பது போல் ஈழத்தமிழரும் தமது நலன்களுக்கு அமைவான உத்திகளை உருவாக்குவதே அவசியமானது. கடந்தகாலம் முழுவதும் அடைந்த தோல்விகளுக்குள் உலகம் நோக்கிய தெளிவான உத்தியில்லாத போக்கே அடிப்படைக் காரணமாகும். பிராந்திய அரசுகளையும் வல்லரசுகளையும் எதிர்கொள்வதற்கான உத்திகளை விடுத்து அத்தகைய அரசுகள் தீர்வுகளை பெற்றுத்தரும் என நம்பிக்கையூட்டுவது அரசியலாகவே மட்டும் அமையும்.

Recommended For You

About the Author: Editor Elukainews