இந்துக்களை அழித்தால் தமிழர்களை அழிக்கலாம் என பேரினவாதம் கங்கணம் கட்டுகிறது – வாசுதேவ குருக்கள் கண்டனம் தெரிவிப்பு

இலங்கையில் இந்து சமயத்தை அழித்தால் தமிழர்களை அழித்து விடலாம் என பேரினவாத சக்திகள் கங்கணம் கட்டுவதாக வீணாகான குருபீடத்தின் அதிபர் சபா வாசுதேவக் குருக்கள் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை சங்கானை பேருந்து தரிப்படத்தில் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசு கட்சி கிளை ஏற்பாடு செய்த தமிழ் மக்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களை மீண்டும் ஒடுக்குவதற்கு சில தீய சக்திகள் ஒன்று கூடியுள்ள நிலையில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து அவற்றை முறியடிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு இந்த சமயத்தை அழிக்க தொல்லியல் திணைக்களம் என்ற போர்வையில் தீய சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
வவுனியா நெடுங்கணியில் அமைந்துள்ள வெடுக்கு நாறி ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை சமயத்தை மட்டுமல்ல தமிழினத்தின் அடையாளத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாடாகவே பார்க்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக குருந்தூர் மலை விவகாரமும் இந்து சமயத்தை ஒழிப்பதன் மூலம் தமிழர்களின் வரலாற்றை அப்  தேசத்திலிருந்து இல்லாது ஒழிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே தமிழினம் அன்று தொட்டு இன்று வரை போராடிக் கொண்டிருக்கும்  இனமாக இருக்கின்ற நிலையில் எமது இனத்தையும் சமயத்தையும் பாதுகாப்பதற்கு போராட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், சமூகமட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews