தமிழ்நாட்டு மீனவர்களையும் வடபகுதி மீனவர்களையும் முட்டிமோத வைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக அரசு பயன்படுத்துவதாக  குற்றச்சாட்டு…! இன்ப நாயகம்.

எல்லை மீறிய  இந்திய மீனவர்களி னுடைய பிரச்சனையை அரசாங்கம் தமிழ்நாட்டு மீனவர்களையும் எமது வடபகுதி மீனவர்களையும் முட்டிமோத வைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதாக  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்ப நாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது

யாழ் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக அதற்கான தீர்வை பெறுகின்ற வகையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் அண்மைக்காலமாக குறிப்பாக வட பகுதியில் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு போன்ற பிரதேசங்களில் இந்திய இழுவைப் படகினுடைய வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் அப்பிரதேச மீனவர்கள் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அதிகரித்துள்ளது.  குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் அதனுடைய தாக்கம், பாதிப்பின் காரணமாக தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் தேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில் அவர்களுடைய தொழில் வளங்கள்  பாதிப்புக்கு உட்பட்டுள்ளது.  நாளாந்தம் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய குடும்பங்களின் ஏனைய உறவுகளின்,  அவர்கள் சார்ந்த அங்கத்தவர்களின், அவர்களில்  தங்கியிருக்கின்ற  இதர தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்திய இழுவைப்  படகுகள் யுத்தம்  முடிவடைந்தத பன்னிரண்டு வருட காலமாக அதிகரித்துச் செல்கிறது.  இந்தச் சந்தர்ப்பத்திலே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அந்த விடயங்களுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலே பல்வேறுபட்ட தீர்வு முயற்சிகளை மேற்கொண்டு வந்த பொழுதிலும்,  அரசாங்கம்,  அரசாங்க கட்சிகள்,  அரசியல் தலைமைகள்,  அவற்றிற்க்கு  தீர்வு வழங்கக்கூடிய வகையில் கையாளாமல் வெறுமனே  ஒரு அரசியல் நோக்கத்திற்காக,  அரசியல் லாபத்திற்காக, பயன் படுத்துகின்ற போக்கை அவதானிக்க முடிகிறது.

அண்மைக்காலத்தில் இந்திய இழுவைப் படகுகள் அதிகரித்துச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது  என்றால் இதற்கு அரசாங்கமும் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்படுகின்ற அரசியல் தலைமைகள், அமைச்சர்களே காரண  கர்த்தாக்களாக இருக்கின்றனர்.  இந்தவகையில் இது  தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் எமது வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சந்தர்ப்பமாக மாறுகிறது. அரசாங்கம் அரசியல் மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக  இந்த விவகாரத்தை கையாளுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews