யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 17 சடலங்கள் காத்திருப்பு! அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை, பணிப்பாளர் தகவல்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய போதிய வசதியற்றிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்ட சடலங்களை அனுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் இறந்த சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 17 சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்காக பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் கோம்பை மயானத்தில் மட்டும் மின் தகனம் செய்ய கூடிய வசதிகள் காணப்படுகின்ற நிலையில் இறந்த உடல்களை மின் தகனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போதனா வைத்தியசாலையில் உள்ள 17 சடலங்களில் 4 சடலங்களை அனுராதபுரத்தில் மின் தகனம் செய்யவதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்றுள்ளது. சடலங்களை அனுராதபுரத்தில் எரியூட்டுவதற்கான நிலமைகள் இருக்கின்றபோதும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் செல்வது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே குறித்த விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் தொடர்ந்தும் சடலங்களை அனுராதபுரத்தில் எரிப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews