மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்  தலைவரிடம் எட்டு மணிநேர விசாரணை -ஏற்பாட்டுக் குழு கண்டணம்.

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் நேற்றைய தினம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் (Counter terrorism investigation division) மாவீரர் நாள் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று கொழும்பில்  அழைக்கப்பட்டிருந்தார்.

இதன் பிரகாரம் காலை 8.30தொடக்கம் மாலை 5.30வரை விசாரணைகளை மேற்கொண்டு அவரின் வாக்கு மூலத்தினைப் பதிவு செய்ததன் பின்னர் அவரை  விடுவித்திருந்தனர்.இந்தச் செயற்பாடானது திருகோணமலையில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான கெடுபிடிகள் நடைபெறவில்லை.
அரசியல் அமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாப்புத் தரப்பும் புலனாய்வாளர்களும் நவ.27மாலை 5.30மணிவரை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னரும் விசாரணைகளை மேற்கொள்வதானது இறந்தவர்களை நினைவு கூரும் ஐனநாயக உரிமையினையும் ஐனாதிபதிக்குள்ள அதிகாரங்களையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் எமது மக்களின் மனோநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.அரசினது இச்செயற்பாட்டை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இன்று மாலை அறிவித்ததுடன் இச் செயற்பாடுகள் தொடர்பில் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews