கதி கலங்க வைக்கும் துருக்கியின் மரண ஓலம் : பலி எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

துருக்கி – சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பாரி நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்தது.

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்தும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த பாரிய நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் ஊடகங்கள் செய்தி வெயிளிட்டுள்ளன.

துருக்கி ஜனாதிபதி தய்யிப் எர்துகான் (Tayyip Erdoğan) கூறியதாவது, மீட்பு பணி மற்றும் நிவாரணக் குழுக்கள் வருவதற்கு தாமதமானதுதான் அதிக உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

துருக்கியில் ஏற்ப்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் துருக்கி சென்றடைந்தன.

இந்த விமானங்களில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவசரகால மருந்து பொருட்கள் ஆகியன துருக்கி மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளன.

மேலும், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் துருக்கி, சிரியாவில் 2.3 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும், 50 இலட்சம் பேர் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews