தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதா? சிதைந்து அழிந்து போவதா? சி.அ.யோதிலிங்கம்.!

தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதா? சிதைந்து அழிந்து போவதா?
சி.அ.யோதிலிங்கம்

கடந்த 22 ஆம் திகதி தமிழத்தேசியக் கட்சிகளான விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்
மக்கள் கூட்டணியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர் சுமார் மூன்றரை மணி நேரம் இக்கலந்துரையாடல் இடம்
பெற்றதாகக் கூறப்படுகிறது. முக்கிய தலைவர்களான மாவை சேனாதிராஜாää
சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.எ.சுமந்திரன், என்.சிறீகாந்தா,
சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரும் கிழக்கிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனும் இக் இக்கலந்துரையாடலில் பங்கு
பற்றியிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்களை அடையாளம் காணல் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடருக்கு
அறிக்கை ஒன்றைத் தயாரித்து சமர்ப்பித்தல். அரசுடனான பேச்சுவார்த்தை என்பன முக்கிய
விடயங்களாகப் பேசப்பட்டன. ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக்கூடிய விடயங்களாக. நான்கு விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான
கோரிக்கையை முன்வைத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுத்தல், தாயகத்தில் இடம்பெறும் திட்டமிட்ட காணிப்பறிப்புக்களை
நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,13 வது திருத்தச்சட்டத்தை முற்றாக
நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் என்பவையே இந் நான்கு விடயங்களுமாகும்
13 வது திருத்தச்சட்டம் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட அரசியல் தீர்வை முன்வைப்பதால் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது
அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய 13 ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற அரசு முன்வருவது நல்லிணக்க நடவடிக்கையாக கருத
முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட அடையாளப்படுத்தப்பட்ட விடயங்களில் ஒருமித்து செயலாற்றுவதுடன்
ஏனைய விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது
என்றும் இணக்கம் காணப்பட்டது. அரசியல் தீர்வு சம்பந்தமாக அரசுடன் பேச்சுவார்த்தை
நடத்துவது அவசியம் என்றும் என்றும் எனினும் அது தமிழ் மக்களின் நலன்களுக்காக இருக்க
வேண்டுமே ஒழிய சர்வதேச அழுத்தங்களிலிருந்து அரசு தரப்பு தப்புவதற்கு இடம் கொடுப்பதாக கூடாது. என்றும் முடிவு எட்டப்படடது. போருக்கு முன்னும் பின்னும் அரசு
திட்டமிட்ட நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமானது இவ்வாறு முடிவுக்கு கொண்டு வருதல் பேச்சுக்கான ஒரு நல்லிணக்க நடவடிக்கையாக அமைவதோடு சாதகமான சூழலையும் உருவாக்கும் என்றும் கூறப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் தமிழ்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் உட்பட ஏனைய விடயங்களையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
செப்ரெம்பரில் வரவிருக்கும் ஐ.நா. கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை
சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதன் பொருட்டு தமிழ்த்தரப்பினால் ஒருமித்த அறிக்கை ஒன்றும் தயாரித்து
சமர்ப்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் 46/1 பிரேரணையில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமலும் அதே வேளை அவற்றிற்கு எதிராகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியும் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர்
அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில்
விபரங்களைப்பட்டியலிட்டும் அறிக்கையைத் தயாரிப்பது என்றும் இணக்கம் காணப்பட்டது.
நீண்ட காலத்தின் பின்னா இரண்டு தமிழத்தேசியக்கூட்டணிகளும் கலந்துரையாடி பல்வேறு விடயங்கள் தொடர்பாக இணக்கத்துக்கு வந்தமை வரவேற்கக் கூடியவையே. தமிழ் மக்கள்
இன்று அரசியல் தீர்வு என்ற அடிப்படைப்பிரச்சினை இன அழிப்புக்கு சர்வதேச நீதிகோரும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் பொனோர் விவகாரம், காணிப்பதிவு விவகாரம் என்கின்ற இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுதல் உட்பட மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப்பிரச்சினை என ஐந்து
வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவை பற்றி இக் கட்டுரையாளர் முன்னரும் பல தடவை கூறியிருக்கின்றார். இவ் ஐந்து பிரச்சினைகளில் அரசியல் தீர்வு
என்கின்ற அடிப்படைப் பிரச்சினையும் இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோருதல்
என்கின்ற பிரச்சினையும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டிய
விடயங்களாகும். இதனை முன்னெடுப்பதற்கான கால அட்டவணை ஒன்று அவசியம். ஏனைய
பிரச்சினைகளான ஆக்கிரமிப்பு பிரச்சினை, இயல்பு நிலையைக் கொண்டு வருதல்
பிரச்சினை, அன்றாடப்பிரச்சினை, என்பன உடனடியாகத்தீர்க்க வேண்டிய
பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளை உடனடியாகத்தீர்ப்பதன் மூலமே அரசு
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்லெண்ணத்தைக் காட்டக்கூடியதாக இருக்கும். இது பற்றியும்
இக்கட்டுரையாளர் முன்னரும் பல தடவை கூறியிருக்கிறார்.
இவற்றில் சில விடயங்களை கலந்துரையாடலில் பங்குபற்றிய சில
தமிழ்த்தேசியக்கட்சிகள் அடையாளம் கண்ட போதும் அவை போதுமானவை எனக்கூற முடியாது.
எனவே எதிர்காலத்திலாவது உடனடியாகத்தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளை பட்டியலிட்டு
அடையாளப்படுத்தி அரசிடம் கோரிக்கைகளாக முன்வைப்பது அவசியம். இந்த விடயங்களை
முழுமையாக நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசை விடுவிப்பதற்கு பயன்படுமே தவிர தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்கு எந்தவகையான பயன்பாட்டையும் கொடுக்க மாட்டாது. உடனடியாகத்
தீர்க்கப்படவேண்டிய விபரங்களை பின்வருமாறு அடையாளம் காட்டலாம்
1. அரசு மேற்கொள்ளும் பச்சை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக நிறுத்துதல்
வேண்டும் குறிப்பாக தொல்லியல் பிரதேசம் எனக்கூறி காணிகள்
ஆக்கிரமிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துதல் வேண்டும்.
2. முதலீட்டுத்திட்டங்கள் என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் கடல் வளங்களும்ää
நில வளங்களும் கனிய வளங்களும் அபகரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல்
வேண்டும். இவ்வாறான முதலீட்டுத்திட்டங்களை மேற்கொள்ளும் பொது தமிழர்
தாயகத்திலுள்ள உள்ளுராட்சிச் சபைகளுடன் கலந்தாலோசித்து அவற்றையும் இணைத்துக்
கொண்டே மேற்கொள்ளுதல் வேண்டும்.
3. தேசியப்பாடசாலைகள் என்ற பெயரிலும் வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துதல் என்ற
பெயரிலும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது உடனடியாக
நிறுத்தப்படல் வேண்டும்.
4. நகர அபிவிருத்தி அதிகார சபை நகர விரிவாக்கம் என்ற பெயரில்
உள்ளுராட்சிச் சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது உடனடியாக
நிறுத்தப்படல் வேண்டும்.
5. வலிகாமம் வடக்கிலுள்ள காணிகள் உட்பட போர்க்காலத்தில் படையினரால்
பறிக்கப்பட்ட அனைத்துக் காணிகளும் உடனடியாக மீள ஒப்படைக்கப்படல் வேண்டும்.
6. தமிழர் தாயத்தில் கண்ட கண்ட இடமெல்லாம் பௌத்த விகாரைகள் கட்டப்படுவது
உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
7. படையினருக்கென அடாத்தாக காணிகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல்
வேண்டும்
8. அரசியல் கைதிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக
விடுதலை செய்தல் வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு வாழ்வாதார
உதவிகள் உடனடியாக வழங்கப்படல் வேண்டும்.
9. காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியப்படுவதோடு
போதுமான இடைக்கால இழப்பீடு சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு
உடனடியாக வழங்கப்படல் வேண்டும்.
10. மாகாணசபைத்தேர்தல் சட்டம் பழைய விகிதாசார முறைப்படி இடம் பெறும் வகையில்
திருத்தப்பட்டு உடனடியாக தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.
11. வடமாகாணத்துக்கான மாகாண முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்படுவதற்கு உடனடியாக
அனுமதி வழங்கப்படல் வேண்டும்.

ஐ.நா. கூட்டத்தொடர் தொடர்பாக ஒருமித்த அறிக்கையை சமர்ப்பிப்பது என்ற முடிவும்
வரவேற்கப்படவேண்டியது. ஆனால் அந்த அறிக்கையில் 46/1 பிரேரணையில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமல் இருப்பதையும் அதற்கு எதிராகச் செயற்படுவதையும்
சுட்டிக்காட்டுவது பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுவது என்பவை மட்டும் போதுமானதல்ல. இன
அழிப்பு தொடர்பாக சர்வதேச சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பதை வலுவாக அடையாளமிட்டுக்காட்டுவது மிகவும் அவசியமானதாகும். 46/1 பிரேரணையை சிறீலங்கா அரசு ஏற்கனவே நிராகரித்துவிட்டது எனவே அதனைப்பற்றிப்
பேசுவதில் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. அடுத்த கட்டத்துக்கு நகர்வது பற்றியே
யோசிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த கூட்டத்தொடரில் மனித உரிமை
ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை முன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள்
இணைந்த முன்வைத்த அறிக்கை கடந்த கூட்டத்தொடருக்கு தமிழத்தேசியக் கட்சிகளினால்
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய அறிக்கையைத்
தயாரிப்பதே ஆரோக்கியமாக இருக்கும்
அடுத்த கட்டமென்பது மூன்று வகையான நகர்வுகளாக இருக்கலாம். இன அழிப்பு
விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடமை முடிந்த விட்டது. இதற்கு மேலாக
பெரிதாக எதனையும் அதனால் செய்து விட முடியாது. இதனால் அவ்விவகாரத்தை மனித உரிமை
பேரவைக்கு அப்பால் நகர்த்தி விட்டு அன்றாடம் இடம் பெறும் மனித உரிமை
விவகாரங்களை பேரவையின் கவனத்திற்கு விட்டு விடலாம். இது முதலாவது நகர்வாக இருத்தல்
வேண்டும்.
இரண்டாவது நகர்வாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு விவகாரத்தைப்
பாரப்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும். இதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கும்
ஐ.நா. பொதுச்சபைக்கும் விவகாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு சில வேளைகளில் சீனாவும், ரஸ்யாவும் மறுப்பானை அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுத்து
நிறுத்தலாம். அவ்வாறு நிறுத்தினாலும் திரும்பத் திரும்ப கொண்டு வருவதற்கு
முயற்சிக்க வேண்டும். பாலஸ்தீனப்பிரச்சினையில் பல விவகாரங்கள் ஐ.நா.
பாதுகாப்புச்சபைக்கு வந்த போது அமெரிக்கா மறுப்பானை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்த போதும் திரும்பத் திரும்ப கொண்டு வரப்பட்டது திரும்பத்திரும்ப கொண்டு வருவது
இன அழிப்பு விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்குவதற்கு பெரிதும் உதவிகரமாக அமையும்
மூன்றாவது நாகர்வு சர்வதேச அரசுகள் தங்கள் தங்கள் நாடுகளிலேயே
அந்நாடுகளின் சட்டங்களுக்கேற்ப இன அழிப்பு விசாரணையை நடாத்துவதாகும்;
பிரிட்டன் உட்பட பல நாடகளில் இதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் அந் நாடுகள் அதற்கான விருப்பத்தினைத்தான் இன்னமும் போதியளவு காட்டவில்லை. தமிழ்த்தரப்பு சர்வதேச சிவில் சமூகத்துடன் இணைந்து வலுவான அழுத்தங்களைக் கொடுக்கும்
போது இவற்றைச் சாத்தியமாக்க முடியும். சர்வதேச அரசுகள் குறிப்பாக அமெரிக்கா, மேற்குலக நாடுகள் இந்தியா போன்றவை தங்கள் தங்கள் அரசியல் நலன்களுக்கு ஏற்ப
தான் செயற்படும் என்பது உண்மையே! ஆனாலும் இன்று இந்த நாடுகளுக்கும் ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. அதே வேளை தமிழ் மக்களுக்கும் தேவை இருக்கின்றது. இவ்விரண்டு
தேவைகளுக்கும் இடையே பொதுப்புள்ளியைக் கண்டுபிடித்து அதனைப் பலப்படுத்துதன் மூலமே
இவற்றைச் சாத்தியமாக்க முடியும். கடந்த காலத்தைப் போல வல்லரசுகள் தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது
மேற்கூறிய விடயங்களை முன்னெடுப்பதென்றால் அதற்கான நிபந்தனை தமிழ்
மக்கள் பலமாக இருப்பதே. ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ் மக்களின் பலத்தைக்
கட்டியெழுப்ப முடியாது. இந்தக்கலந்துரையாடலில் ஈடுபட்ட கட்சிகள் கொள்கை
நிலைப்பாட்டில் உறுதியானவை எனக்கூறுவதும் கடினம். கடந்த காலத்தில் தங்களது
உறுதித்தன்மையை அவை மெய்ப்பிக்கவில்லை. தமிழ்மக்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப் படுவதற்கே இக்கட்சிகள் உதவியிருந்தன. எனவே இக் கட்சிகளை மட்டும் நம்பி தமிழ் மக்களின் எதிர்காலத்தை இவற்றிடம் ஒப்படைக்க முடியாது.தவிர அரசியல் கட்சிகளினால் மட்டும் இவ்விவகாரம் முன்னெடுக்கப்படக்கூடியதல்ல.
மக்கள் அமைப்புக்களையும் இணைத்த ஒரு தேசிய அரசியல் இயக்கத்தினாலேயே இதனை
முரணின்றி முன்னெடுக்க முடியும். இன்று தமிழ்க்கட்சிகள் எனக் கூறப்படுபவை உண்மையில்
அரசியல் கட்சிகளாகவும் இல்லை வெறுமனே தேர்தலில் போட்டியிடும் குழுக்களாகவே இவை
உள்ளன. குறைந்த பட்சம் தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளைப் போலக் கூட இவை
இல்லை.வெறும் பெயர்ப் பலகைக் கட்சிகளாகவே உள்ளன.
இக் கட்சிகளிலும் தமிழத்தேசிய மக்கள் முன்னணி இக் கலந்துரையாடலில் பங்கு
பற்றவில்லை. அதன் பங்களிப்பு இல்லாமல் ஒருங்கிணைந்த கட்சிகளின் குரலை கட்டியெழுப்ப முடியாது. எனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பான
பேச்சுவார்த்தை நடாத்தப்படல் வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீண்டாமையைப் பின்பற்றுவது தமிழ்த் தேசிய அரசியலுக்கும் நல்லதல்ல. அக்
கட்சிக்கும் நல்லதல்ல. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டும் தனித்து நின்று தமிழர் விவகாரத்தை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது. இது ஒருங்கிணைவை வேண்டி நிற்கும் காலம். இதில் மைதானத்தில் வெளியே நின்றுகொண்டு ஆட்டத்திற்கு நான் வரமாட்டேன் எனக்
கூறுவது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. தமிழ்
மக்கள் மத்தியிலுள்ள நடுநிலை சக்திகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு இது தொடர்பாக
அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் எண்ணிக்கையில் ஒரு சிறிய தேசிய இனம் அது தன்னுடைய அக ஆற்றலை
மட்டும் வைத்துக்கொண்டு முன்னேற முடியாது புற ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உலகத் தமிழர்களையும் உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் எம்முடன் இணைத்துக்
கொண்டு ஒரு பேரியக்கமாக முன்னேறும் போதே இதனைச் சாத்தியமாக்க முடியும்.
முன்னரே கூறியது போல இவற்றிற்கெல்லாம் முக்கிய நிபந்தனை தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதே. இது பற்றி முன்னெடுக்கும் இக்கட்டுரையாளர்
வற்புறுத்தியிருக்கிறார்
இந்த விவகாரத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதா? அல்லது சிதைந்து
அழிந்துபோவதா? என்பதை தமிழ்த்தரப்புக்கு உள்ள தெரிவு

Recommended For You

About the Author: Editor Elukainews