உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது – எதிர்க் கட்சித் தலைவர்

உரப்பிரச்சினை என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் இவ்விடயத்தில் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் எவ்வாறான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க போகின்றது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேயிலைச் செய்கையின் உரப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டியது அவசியம்.

உரங்களின் விலைகள் மிகவும் உயர்வடைந்துள்ளன. உரப்பற்றாக்குறையும் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த உரங்களுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் உறுதியான வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றதா?

அவ்வாறான திட்டங்கள் இருக்குமாயின் அந்தத் திட்டங்கள் என்னவென்தை கூற வேண்டும்.

சில உரங்களின் விலைகள் 20,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.

மிகவும் தரம் குறைந்த களைநாசினியை விவசாயிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

தரமற்ற உர பாவனையை தடுப்பதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளீர்கள்?

சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் எந்தெந்த அடிப்படையில் நீங்கள் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்கள்?

தேயிலைச் செய்கையில் தொழிலாளர்களை கொண்டு களைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், தொழிலாளர்களுக்கான கூலி 750 ரூபாயிலிருந்து 2,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

கிளைபோசெட் தடைக்கு முன்பாக 1200 ரூபாயாகக் காணப்பட்டது. தற்போது 9000 ரூபாய் வரை அதிகரித்து இருக்கின்றது.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க போகின்றது என்றே நாம் கேட்கின்றோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews