இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு! ஊரடங்கு சட்டத்தை மதித்து வீடுகளில் இருப்பதே நல்லது.. |

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு மதிப்பளித்து மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, ஊரடங்கு சட்டத்தை மீற கூடாது என எச்சரித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் 10 நாட்களுக்கு நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். மக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் மீறக்கூடாது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்

அத்தியாவசிய சேவைகள், ஆடை, கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயம், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள் மற்றும் ஊடகங்கள் மட்டுமே செயற்பட அனுமதிக்கப்படும். இருப்பினும் இந்த துறைகளில் குறைந்தளவு பணியாளர்கள் மாத்திரமே

வேலைக்கு அழைக்கப்பட வேண்டும். பல்பொருள் அங்காடிகள், உணவக விநியோகங்கள் உட்பட மற்ற அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும். இந்த 10 நாட்களில் தடுப்பூசி போடுவதைத் தொடர சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இராணுவ குழுக்கள் உள்ளிட்ட நடமாடும் குழுக்கள், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கும். கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், சுகாதாரத் துறையினர்

பல்வேறு சிரமங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இதனைக் கவனத்தில்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews