கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக தொலைதூர பகுதிகளில் உள்ள அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரிகள் மூடப்படுவதால் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக ஜெயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாரிய பேக்கரிகளே இயங்குவதாகவும், கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பாரிய அளவிலான பேக்கரிகளுக்கு மாத்திரம் கோதுமை மாவை விநியோகிப்பதாகவும், அதனால் சிரமங்களுக்கு மத்தியிலும் இவ்வாறே இயங்குவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமால் பெரேரா,
“ஹோட்டல்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான மா தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாத்துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அப்பம் மா பிரச்சினை காரணமாக தென் மாகாணத்தில் சுமார் அறுபது வீதமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,
“கோதுமை மா பிரச்சினை காரணமாக ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் அதிகரித்துள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்களும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இதனால் ஹோட்டல் மற்றும் உணவகங்களை நடத்துவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.