ருமேனியாவில் இருந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள் – வெளியாகியுள்ள தகவல்

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரேதமாக பணம் கொடுத்து, ட்ரக்குகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல இலங்கையர்கள், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் செல்வதற்காக, ருமேனிய எல்லையை விட்டு வெளியேற டிரக் சாரதிகளுக்கு 3,500 – 5,000 யூரோ செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

“இது ஆபத்தானது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நாங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். ருமேனியாவில் ஒரு மணி நேரத்திற்கு 5-8 யூரோ மட்டுமே கிடைக்கும், அது எங்களுக்கு போதாது.

எப்படியாவது, ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டை அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அங்கு எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில், ருமேனியாவில் இருந்து வெளியேற முற்பட்ட போது ருமேனியாவின் மேற்கு எல்லையில் டிரக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 புலம்பெயர்ந்தவர்களில் 16 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கி, சிரியா, இலங்கை மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து 38 புலம்பெயர்ந்தோர் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேற முயன்றபோது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு மினிபஸ்களில் மறைந்திருந்ததாக Agerpres தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் பதிவுசெய்யப்பட்ட மினிபஸ்கள் முறையே 33 மற்றும் 42 வயதுடைய இருவரால் இயக்கப்பட்டன.

மேலும் எல்லைச் சோதனையின் போது, ​​சரக்கு பெட்டிக்கும் பயணிகளுக்கான பெட்டியின் பின் இருக்கைக்கும் இடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடங்களில் புலம்பெயர்ந்தோர் மறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

“இரண்டு பெட்டிகளுக்குள்ளும் இலங்கையைச் சேர்ந்த 22 முதல் 51 வயதுக்குட்பட்ட 16 பிரஜைகள் இருந்தனர், அவர்கள் தனிப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin