சிறிலங்கா மீது மீண்டும் பிரேரணை – குற்றவாளியாக ரணில்..! ஐ.நாவில் காத்திருக்கும் ஆபத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது வரக்கூடிய தீர்மானத்தில், ஒரு முக்கிய விடயமாக பொருளாதார குற்றங்கள் உள்ளடக்கப்படலாம் என தாம் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று (14) செய்தியாளர்களுக்கு வழங்கிய விசேட ஊடக சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“அவ்வாறான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் மீது விவாதத்தை கொண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அவ்வாறான தீர்மானத்தை தடை செய்வதற்காக சிறிலங்காவினுடைய வெளிவகார அமைச்சர் அலி சப்ரி இப்பொழுது ஜெனிவாவில் இருக்கின்றார். அதற்கு எதிராக அவர் ஏற்கனவே கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அவ்வாறான தீர்மானம் வராமல் இருப்பதற்கான தடைகளை அவர் செய்யக்கூடும். ஏனென்றால், அவ்வாறான தீர்மானம் வந்தால் சர்வதேச ரீதியாக சில சமயம் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். ராஜபக்ச குடும்பம், பல்வேறுபட்ட அதிகாரிகள் எனப் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

இந்த நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் கண்டுபிடிப்பதற்காக பிரத்தியேக ஆணைகுழுக்களை நியமிக்க வேண்டியும் ஏற்படலாம்.

ஆகவே இவை அனைத்திலும் இருந்து தப்ப வேண்டுமானால், இந்தத் தீர்மானம் வரக்கூடாது என்பதில் சிறிலங்கா தீர்மானகரமாக இருக்கிறது.

ஆனால் அவ்வாறான தீர்மானம் வருவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்” என்றார்.

Recommended For You

About the Author: admin