அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.

எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் சேவைகளை பேண வேண்டிய தேவைக்காக, வேறு துறைகளில் அதிகமாக இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, அரச சேவையை மேலும் திறமையாகவும், உயர் மட்டத்திலும் பராமரிக்கும் நோக்கில், பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட 60,000 அரச ஊழியர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைக் கையாண்டும், அத்துடன் கடந்தகால அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரமும் அடிக்கடி பட்டதாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் நேரடியாக அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையால், ஒட்டுமொத்தமாக அரச சேவை மிகையாக காணப்பட்டாலும், சில சேவைப் பிரிவுகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.

அதேபோல் ஆட்சேர்ப்பின் போது பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றமையால் ஏற்பட்டுள்ள விளைவுகளின் காரணமாக அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயங்களை மீளாய்வு செய்து அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகள் தொடர்பான முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin