அபாயத்தை உணர்ந்து செயற்படுங்கள்: கிளிநொச்சி மக்களிடம் கோரிக்கை!

நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட
தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது நோயாளி 07.11.2020 அடையாளம்
காணப்பட்ட நாள் தொடக்கம் யூலை 2021 வரை 1400 கொவிட் 19 நோயாளிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள், 10 வயதுக்குட்பட்ட 52 சிறுவர்கள், அடங்குகின்றனர். அத்தோடு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளன.மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. ஆனால் பெரும்பாலான பொது மக்கள் எவ்வித சமூக பொறுப்பும் இன்றி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது நடமாடித் திரிவதனை அவதானிக்க முடிகிறது. பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதுவிடின் தொற்று
பரவும் வேகம் மிகவும் அதிகரிக்கும்.

தடுப்பூசியினை கிளிநொச்சி மக்கள் அதிக ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.
மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் அனைத்தும் அந்தக் காலப் பகுதிக்குள் செலுது்தி முடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியினை செலுத்திக்கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். இதனை அனைத்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்கின்றவர்களில் இவ்வாறு அதிகரித்த தொற்றாளர்கள் இனம் காணப்படுகின்ற போது சமூகத்தில் இன்னும் எத்தனை பேர் தொற்றுடன் இருக்கின்றார்கள் என்பதும் முக்கியமானது.

மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார வளங்களை கொண்டுள்ள கிளிநொச்சி போன்ற
மாவட்டங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்த மருத்துவ வளங்கள் அனைத்தும் அங்கு திசைதிருப்பபடுகின்ற போது ஏனைய நோய்கள், சிகிச்சைகளை கவனிக்க முடியாது போய்விடும். இதனால் அதிகளவு பாதிப்புக்கள் மற்றும் பேரிழப்புக்கள் ஏற்படும். எனவே பொது மக்கள் இந்த நெருக்கடிகளை புரிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதனை இந்த இடத்தில் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews