மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் கடற்றொழிலாளர்கள் பாரிய பாதிப்பு

மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடற்றொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 250 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்ணெண்ணெய் அதிகரிப்பானது கடற்றொழிலாளர்களையே அதிகளவு பாதித்துள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வாழ்வாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக மண்ணெண்ணெய் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்ததால் கடற்றொழிலை முன்னெடுக்க முடியாது கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீள இயங்க தொடங்கியதன் பின்னர் மண்ணெண்ணெய் முறையாக விநியோகிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துரைத்த கடற்றொழிலாளர்கள், நாங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கடற்றொழிலை முன்னெடுக்க முடியாது பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறான நிலையில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு காரணமாக எம்மால் கடற்றொழிலை முன்னெடுத்து செல்ல முடியாது. அன்றாடம் எமது தொழிலை முன்னெடுப்பதற்கு நாளொன்றுக்கு 40, 50 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டால் நாம் எமது வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்வது?

கடற்றொழிலாளர்களுக்கு பழைய விலைக்கே மண்ணெண்ணெயை விநியோகிப்பதாக அமைச்சர் கூறினார். எனினும் அவர் இவ்விடயத்தில் பொய்யுரைத்துள்ளார்.

மக்களுக்கு மீன் உணவை உண்ண முடியாத நிலைமையே ஏற்பட போகின்றது. மீனின் விலை அதிகரிக்கும். ஒரு கிலோகிராம் மீன் 2000 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட போகின்றது.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. உண்மையில் கடற்றொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமையே ஏற்படபோகின்றது.

Recommended For You

About the Author: admin