ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் அவமதிப்பு, உரிய நடவடிக்கை இல்லையேல் பணி புறக்கணிப்பு……! மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

ஊர்காவற்றுறை எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் மருத்துவர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 30/07/2022  அன்று
ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் பிரதேச செயலாளரூடாக விசேட அனுமதியை பெற்று முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்  பெற சென்றபோது முன்னுரிமை வழங்கமுடியாது என்று மறுத்து அவரை கடுமையான வார்த்தைகளால் பேசி,  அவமானப்படுத்தியதோடு  மட்டுமன்றி அவரை தாக்கும் வகையில் பாசாங்கு செய்ததாக அரச வைத்திய. அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் எமக்கு அனுப்பிய ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு
ஊர்காவற்துறை எரிபொருள் நிரப்பு நிலைய பம்பி இயக்குநரும்    முகாமையாளரும்  ஆகியோர் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டமை  தொடர்பான கூட்டம்  01/08/2022 அன்று  பிற்பகல் 12 மணியளவில் வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில்  வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய பணிப்பாளர் , கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் , அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் தீவக வைத்தியசாலைகளுக்கான கிளை சங்கத்தின்  அதிகாரிகள், ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், பொது மேலாளர் ( GM) ,செயலாளர் ஆகியோர் பங்குபற்றினர்.
எரிபொருள் நிரப்பு நிலைய பம்பி இயக்குநரின்   வைத்தியசாலை ஊழியர்களை மரியாதைக்குறைவாக  பேசும் பண்பு தொடர்ந்து அதிகரித்து   வருவதால் அவரை மாற்ற வேண்டும் என்று  எமது சங்கத்தின் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர் . மேலும் சமூகத்தில் எரிபொருள் வழங்குத்தலை காட்டிலும் மருத்துவர்களின் கண்ணியம் முக்கியமாகும் என்பதை அவர்கள்  வலியுறுத்தினர்.
சுகாதார சேவையானது அத்தியாவசிய சேவை என அரசினால் அறிவிக்கப்பட்டு  சுகாதார அமைச்சானது சுற்றுநிருபங்கள் வழங்கி  ஒவ்வொரு மாகாணத்திற்கும் பொறுப்பான ஆளுநர்  மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர்  தமது பிரதேச அரச அதிகாரிகள் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன்  இணைந்து ஒவ்வொரு எரிபொருள் நிரப்புநிலையத்திலும் பத்து  சதவீதத்தை சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இருந்த போதிலும்   கடந்த  மூன்று மாதங்களாக குறித்த ஒரு எரிபொருள் பம்பி இயக்குநர் மட்டும் எரிபொருள் பெற்றுக்கொள்ள செல்லும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும்  வைத்தியசாலை   ஊழியர்களை வார்த்தைகளால் மரியாதை குறைவாக தொடர்ந்து துன்புறுத்தி  வந்துள்ளார். வேண்டுமென்று  எரிபொருள் வைத்துக்கொண்டும் வழங்க மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு.
இது தொடர்பாக ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளருக்கு ஊர்காவற்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் பலமுறை முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகள் அவ் எரிபொருள் பம்பி இயக்குநருக்கு எதிராக இதுவரை எடுக்கப்படவில்லை.
கடந்த 30/07/2022  அன்று
ஊர்க்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் பிரதேச செயலாளரூடாக விசேட அனுமதியை பெற்று முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்  பெற சென்றபோது முன்னுரிமை வழங்கமுடியாது என்று மறுத்து அவரை கடுமையாக பேசி அவமானப்படுத்தியதோடு  மட்டுமன்றி அவரை தாக்கும் வகையில் பாசாங்கு செய்ததாக அவ்வைத்தியர் எமது சங்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.இச்சந்தர்ப்பத்தில்   ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளரும் அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்ததாகவும் அவரும் வைத்தியரை மரியாதைக்குறைவாக நடத்தியதாகவும்
அவ்வைத்தியர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை  தொடர்ந்தே கௌரவ ஆளுநரின் ஊடாக  இவ் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது . இருந்த போதிலும் இச்சம்பவத்தை ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தரப்பினர் மறுத்து அப் பம்பி இயக்குநரை பாதுகாக்க முயன்றது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலிருந்தது.
இருந்த போதிலும்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர்  தரப்பினர்  எரிபொருள் நிரப்பு நிலைய பம்பி இயக்குநர்  மீதான  உள்ளக விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தனர் . அது முடியும் வரை அவரை பம்பி இயக்குநர் தவிர வேறு சில பதவிகளுக்கு மாற்ற அறிவுறுத்தினர். இது எமக்கு சற்று ஆறுதலாக அமைந்தது.
ஊர்காவற்துறை பலநோக்கு கூட்டுறவு  சங்க குழு உள்ளக  விசாரணை செய்ய அவர்களுக்கு நேரம் தேவைப்படுவதாக கூறியதாலும் அக்கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்படாமையாலும் எமது சங்கத்தின்  அதிகாரிகள் ஒரு  மாத கால
நீண்ட  அவகாசத்தை அவர்களுக்கு  வழங்கினர்.
செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள்  உள்ளக விசாரணையை முடித்து எரிபொருள் நிரப்பு நிலைய பம்பி இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்  யாழ்ப்பாணத் தீவக  மருத்துவமனைகளில் இப்பெற்றோல் நிலையம் மூலமாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைகளான  ஊர்காவற்துறை, வேலணை மற்றும் காரைநகர் வைத்தியசாலைகள் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி  தொழிற்சங்க நடவடிக்கைக்கு  செல்வதை தவிர்க்க முடியாததாகிவிடும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் தீவக வைத்தியசாலைகளுக்கான கிளை சங்கத்தின்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews